மழை பொழிந்தது: மக்கள் மனம் குளிர்ந்தது!

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து, கோடையில் குளிர்வித்து வருகிறது.

நேற்றுமுன்தினம், மாவட்டம் முழுவதும் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்தது. பல்லடம், அமராவதி அணை, திருமூர்த்தி அணை, திருமூர்த்தி அணை (ஐ.பி.,), மடத்துக்குளம் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது.

திருப்பூர் வடக்கு தாலுகா, கலெக்டர் முகாம் அலுவலகம், திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம், அவிநாசி, ஊத்துக்குளி, தாராபுரம், மூலனுார், குண்டடம், நல்லதங்காள் ஓடை, காங்கயம், வெள்ளகோவில், வட்டமலைக்கரை ஓடை, உடுமலை பகுதிகளில் மிதமான மழை பதிவாகியுள்ளது. நேற்று காலை, 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் சராசரியாக 18.39 மி.மீ., க்கு மிதமான மழை பதிவாகியுள்ளது.

நேற்றும் கனமழை



திருப்பூர் நகர பகுதிகளில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதியம், 2:45 மணியளவில் சடசடவென மழை பெய்யத்துவங்கியது. அரைமணி நேரம் வரை சற்று பலமாக பெய்தமழை, மாலை முழுவதும் லேசான துாறலாக தொடர்ந்தது. இதனால், பள்ளியில் வகுப்புகள் முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவியர், மழையில் நனைந்தபடி சென்றனர். இரண்டு நாட்களாக தொடரும் மழையால், குளிர் திரும்பியது போன்ற உணர்வை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், மழைக்கு ஏற்ப, வரும் நாட்களில் கோடை வெயில் கடுமையாக சுட்டெரிக்கப்போகிறதோ என்கிற கவலையும் எழுகிறது.

 அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில், மக்காச்சோளம், சோளம் பயிர் சாகுபடிக்கு, மழை ஏற்றதாக இருக்கும். வாழை, காய்கறி பயிர் சாகுபடிக்கும் இந்த மழை பயனளிக்கும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.

கடந்த இரு நாள் பெய்த மழையால், விவசாய தேவைக்கு மட்டுமின்றி, குளம், குட்டைகளிலும் நீர் தேங்கி நிற்க துவங்கியுள்ளது. கோடை வெயில் வெளுத்து வாங்குவதற்கு முன்பே பெய்த இந்த மழை, கோடை வெப்பத்தை ஓரளவு தணிக்கும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement