பாதுகாப்பு படையினருடன் மோதல்: ஈராக்கில் ஐ.எஸ்., பயங்கரவாத தலைவன் பலி

பாக்தாத்: அமெரிக்கா தலைமையிலான கூட்டு ராணுவத்தினருடன் நடந்த மோதலில், சிரியா மற்றும் ஈராக்கிற்கான ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவன் கொல்லப்பட்டான். இதனை ஈராக் பிரதமர் உறுதி செய்துள்ளார்.
ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு உலகத்தின் பல நாடுகளை அச்சுறுத்தி வந்தது. சிரியாவை அந்த அமைப்பினர் கட்டுப்படுத்தி வைத்து இருந்தனர். பிறகு, அமெரிக்காவின் தாக்குதலில் அந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அவர்களின் ஆதிக்கம் குறைந்தது. இருப்பினும், அந்த அமைப்பினர் பல நாடுகளில் செயல்பட்டு வருகின்றனர்.
ஈராக் மற்றும் சிரியாவிற்கான தலைவனாக அபு கதிஜா என்றழைக்கப்படும் அப்துல்லா மகி முஸ்லே அல் ரிபியா என்ற பயங்கரவாதி செயல்பட்டு வந்தான். அந்த அமைப்பின் முக்கிய தலைவனாக கருதப்பட்டான். அந்த அமைப்பின் சர்வதேச தலைவராகக்கூடும் எனக் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், அமெரிக்கா தலைமையிலான பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் அவன் கொல்லப்பட்டான். இதனை ஈராக் பிரதமர் முகமது ஷியா உறுதி செய்துள்ளார்.