பாகிஸ்தானுக்கு உளவு: உ.பி.,யில் ஆயுதப்படை தொழிற்சாலை ஊழியர் கைது

1


புதுடில்லி: பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு முக்கிய தகவல்களை பகிர்ந்த உ.பி., ஆயுதப்படை தொழிற்சாலை ஊழியரை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

உ.பி.,யின் பிரோஷாபாத் நகரில் ஆயுதப்படை தொழிற்சாலையில் பணிபுரிபவர் ரவீந்திர குமார். பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., உளவாளி ஒருவன் நேஹா சர்மா என்ற பெயரில், ரவீந்திர குமாருடன் பேஸ்புக் மூலம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். பிறகு வாட்ஸ் ஆப் மூலம் பேசி வந்தனர். அப்போது தொழிற்சாலை குறித்த பல முக்கிய தகவல்களை ரவீந்திர குமார், நேஹா சர்மாவிடம் பகிர்ந்து வந்துள்ளார். தொழிற்சாலை தொடர்பான ரகசிய தகவல்கள் கசிவதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது, தகவல்களை பகிர்ந்து வந்தது ரவீந்திர குமார் என்பதை கண்டுபிடித்தனர்.

உடனடியாக அவரை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் அழைத்தனர். முதலில் ஆக்ராவில் உள்ள அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடந்தது. பிறகு லக்னோவில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவரிடம் உள்ள மொபைல்போனில் ஆய்வு செய்தனர். அதில், முக்கிய தகவல்களை பகிர்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ரவீந்திர குமார் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Advertisement