ரசாயனம் கலந்த அப்பளம், குளிர்பானம் பல்லாவரம் வாரச் சந்தையில் பறிமுதல்

பல்லாவரம், பல்லாவரத்தில், வெள்ளிக்கிழமைதோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த வார சந்தையில், பூச்செடி முதல் குளிர்சாதன பெட்டி வரை என, அனைத்து பொருட்களும் குறைந்த விலையில் கிடைக்கும். இதை தவிர எங்கும் கிடைக்காத பழைய பொருட்கள், நாய் குட்டி, பறவைகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

இதனால், வெளி மாவட்டங்களில் இருந்து மக்கள் வருகை தருவர். இந்த சந்தையில், காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்வது அதிகரித்து விட்டது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமையான நேற்று, கண்டோன்மென்ட் பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர் பிரபாகரன், தாம்பரம் மாநகராட்சி 2வது மண்டல சுகாதார அலுவலர் சிவகுமார் உள்ளிட்ட அதிகாரிகள், சந்தையில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, தயாரிப்பு, காலாவதி தேதி இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட குளிர்பானம், கேக், ரசாயனம் கலந்த அப்பளம், ஸ்வீட், பிஸ்கட் என, ஒரு டன் அளவிலான பொருட்களை பறிமுதல் செய்தனர். பின், அவற்றை பம்மல், விஸ்வேசபுரம் கிடங்கில் கொட்டி அழித்தனர். மீண்டும் தொடர்ந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, வியாபாரிகளை அதிகாரிகள் எச்சரித்தனர்.

Advertisement