பயணங்கள் இனிதாகும்!

சென்னை, அம்பத்துாரில் உள்ள, 'லோகி பெட் வோல்டு' (Loki Pet World) கென்னல் உரிமையாளர் லோகேஷ். இவர், ப்ரீடரும் கூட. இந்தியா முழுக்க, கார், ரயில், விமான சேவை வழியாக, செல்லப்பிராணிகளை கொண்டு சென்று உரிமையாளர்களிடம், பத்திரமாக ஒப்படைக்கும் பணிகளை மேற்கொள்கிறார். பப்பிகளுடன் பயணிக்கும் போது, பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, 'செல்லமே' பக்கத்திற்காக இவர், நம்மிடம் பகிர்ந்தவை:

பணி மாறுதல் உட்பட பல காரணங்களுக்காக, வெளியூர், வெளிமாநிலங்களுக்கு குடிபெயர்வோரால் செல்லப்பிராணிகளை உடன் அழைத்து செல்ல முடியாது. பல கிலோ மீட்டர் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், 'பெட் டிரான்ஸ்போர்டேஷன்' சேவை தான் கைக்கொடுக்கும்.

ரயிலில் பயணிக்க, முதல் ஏ.சி., கூப்பே, கேபின் அல்லது ரயிலின் கடைசியில் உள்ள கார்ட் (Guard) பெட்டிக்கு அருகே செல்லப்பிராணிகள் மட்டும் பயணிக்க வசதி உள்ளது. பயண தேதிக்கு முன்பே, ரயில்வே நிலையத்தில், செல்லப்பிராணிக்கு தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழ், பயணிப்பதற்கு ஏற்ற உடல்தகுதி இருப்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட கால்நடை மருத்துவரின் சான்றிதழ் சமர்பிப்பது அவசியம்.

விமான சேவையில், பயணிகளுடன், கேபினில் செல்லப்பிராணிகளும் பயணிக்க, சில ஏர்லைன் நிறுவனங்கள் அனுமதிக்கின்றன. சிறிய வகை செல்லப்பிராணிகளை, இம்முறையில் கொண்டு செல்லலாம். 'கார்கோ'வில் செல்லப்பிராணி பயணிக்க, முன்கூட்டியே செல்லப்பிராணி சார்ந்த, ஆவணங்களை சமர்பித்து, முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

புரோட்டீன் அதிகமுள்ள ட்ரை உணவுகளே, பயணத்திற்கு ஏற்றது. இதேபோல குறிப்பிட்ட இடைவெளியில், பப்பி தண்ணீர் எடுத்து கொள்வதையும் உறுதி செய்ய வேண்டும்.

தொடர் சிகிச்சை, உடல்நலம் பாதிக்கப்பட்ட பப்பிகளை, உடனே பயணத்திற்கு தயார்ப்படுத்துவது நல்லதல்ல. அவற்றை, செல்லப்பிராணி வளர்க்கும் நட்பு, உறவினர் வட்டாரம் அல்லது கென்னலில் தங்க வைத்து, இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு, பயணத்திற்கு ஆயத்தப்படுத்த வேண்டும்.

குளிரான இடத்தில் இருந்து வெப்பமான இடத்திற்கு கொண்டு செல்லும் போது, ஏ.சி., வசதி கொண்ட போக்குவரத்து சேவையை அணுகுவதே, பப்பியின் உடலுக்கு நல்லது. பயணத்தின் போது, பப்பியிடம் ஏதேனும் அசவுகரியம் காணப்பட்டால், உடனே அருகாமையில் உள்ள கால்நடை மருத்துவரிடம் சிகிச்சைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

நீண்ட துார பயணத்திற்கு பின், பப்பியை கொண்டு சேர்க்கும் போது, அதனிடம் வெளிப்படும் நன்றியுணர்வும், உரிமையாளரின் கண்களில் தெரியும் மகிழ்ச்சிக்கும் இடையே நடக்கும் உணர்வு பரிமாற்றங்களை வார்த்தைகளால் விளக்கவே முடியாது...

Advertisement