சரணடைந்தால் உயிருக்கு உத்தரவாதம்; உக்ரைன் படையினருக்கு ரஷ்ய அதிபர் புடின் உறுதி

மாஸ்கோ: 'உக்ரைன் படையினர் சரணடைந்தால், நாங்கள் அவர்களின் உயிரை காப்பாற்றுவோம்' என ரஷ்ய அதிபர் புடின் உறுதி அளித்துள்ளார்.


கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ரஷ்யா - உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளை கடந்து போர் நீடிக்கிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் மீண்டும் பதவியேற்றதும், இந்த போரை நிறுத்துவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

30 நாள் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ள உக்ரைன் ஒப்புக்கொண்டது; அதிபர் ஜெலன்ஸ்கியும் அதை உறுதி செய்தார். போர் நிறுத்த திட்டத்துடன், ரஷ்யாவுக்கு அமெரிக்க துாதர்கள் சென்றனர். இந்த சூழலில், டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்ய அதிபர் புடினுடன் நாங்கள் மிகவும் நல்ல மற்றும் பயனுள்ள கலந்துரையாடல்களை நடத்தினோம்.



மேலும் இந்த கொடூரமான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால், இந்த நேரத்தில், ஆயிரக்கணக்கான உக்ரைன் பாதுகாப்பு படையினர் ரஷ்ய ராணுவத்தால் முழுமையாக சூழப்பட்டுள்ளனர்.


மிகவும் மோசமான மற்றும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர். அவர்களின் உயிர்களைக் காப்பாற்றுமாறு புடினிடம் நான் கேட்டுக் கொண்டேன். இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு காணப்படாத ஒரு பயங்கரமான படுகொலையாக இருக்கும்.



அவர்கள் அனைவரையும் கடவுள் ஆசீர்வதிப்பார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதற்கிடையே, 'உக்ரைன் படையினர் சரணடைந்தால், நாங்கள் அவர்களின் உயிரை காப்பாற்றுவோம்' என ரஷ்ய அதிபர் புடின் உறுதி அளித்துள்ளார்.

Advertisement