கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரம் மானியம்; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: மானாவாரி நிலங்களில் 3 லட்சம் ஹெக்டேரில் கோடை உழவு செய்ய
ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரம் மானியம் வழங்கப்படும் (ஒரு ஹெக்டேர் என்பது 2.47 ஏக்கர்) என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சட்டசபையில், 2025 - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். சட்டசபையில் இன்று (மார்ச் 15) 2025-26ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசியதாவது:
உழவர்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் மக்களை பாதுகாப்பார்கள். உழவர்களின் வாழ்க்கையில் வேளாண் பட்ஜெட் வளர்ச்சியை அதிகரிக்கும் என நம்புகிறேன்.
மக்காச்சோளம், கரும்பு உற்பத்தியில் தமிழகம் 2ம் இடம் உள்ளது. 336 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்யப்படுகிறது. வேளாண் சாகுபடி 151 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
172 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 435 இளைஞர்களுக்கு வேளாண் தொழில் துவங்க தலா ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. 1511 ஆழ்துளை மற்று குழாய் கிணறுகள் அமைக்கப் பட்டு உள்ளன. 15 ஆயிரத்து 700 ஆதிதிராவிடர் பழங்குடியினர் உழவர்கள் பயன் பெற்றுள்ளனர். 4 ஆண்டுகளில் 147 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள் முதல் செய்யப்பட்டு ரூ.1452 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
ரூ.510 கோடியில் விவசாயிகளின் இயந்திர தேவைகள் தீர்க்கப்பட்டுள்ளன. பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையாக ரூ. 5,242 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 16.3 லட்சம் ஹெக்டேரில் தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.
மானாவாரி நிலங்களில் 3 லட்சம் ஹெக்டேரில் கோடை உழவு செய்ய ஹெக் டேருக்கு ரூ.2 ஆயிரம் மானியம் வழங்கப்படும். (ஒரு ஹெக்டேர் என்பது 2.47 ஏக்கர்).இவ்வாறு அவர் பேசினார்.
வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்
* விவசாயிகளுக்கு 1.81 லட்சம் பாசன மின் இணைப்பு
*29 மாவட்டங்களில் சிறப்பு தொகுப்பு திட்டம்
*விவசாயிகளுக்கு 3.58 லட்சம் கோடி கடன்
*விவசாயிகளுக்கான நிவாரண தொகை அதிகரிப்பு
*நெல்,பருத்தி சாகுபடியை அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டம்
*கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு
*விவசாயிகளுக்கான விபத்து மரண இழப்பீடு 2 லட்சமாக உயர்வு
*விளைச்சல் அதிகரிக்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும்
*இயற்கை விவசாயத்தைப் பரவலாக்கம் செய்ய இயற்கை விவசாயத் திட்டங்கள்
*சிறுதானியப் பயிர்களின் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க தமிழக சிறுதானிய இயக்கம்.
*உணவு எண்ணெய்த் தேவையில் தன்னிறைவு அடைய எண்ணெய் வித்துகள் இயக்கம்.
*மக்காச்சோள சாகுபடிப் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம்
*தமிழகத்தில் உள்ள 2338 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்
*மண்வளத்தினை மேம்படுத்திட முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்
*விவசாயிகளை அவர்களது கிராமங்களிலேயே சந்தித்து, தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கிட விவசாயியைத் தேடி வேளாண்மை - விவசாயி நலத்துறை திட்டம்
*மலைவாழ் விவசாயிகள்பயனடையும் வகையில், மலைவாழ் விவசாயிகள் முன்னேற்றத் திட்டம்
*நெல் சாகுபடிப் பரப்பினை அதிகரித்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய நெல் சிறப்புத் தொகுப்பு திட்டம்
*1000 வேளாண் பட்டதாரிகள் மற்றும் வேளாண் பட்டயதாரர்கள் மூலம் முதல்வரின் விவசாய நல சேவை மையங்கள்
*7 புதிய அரசு விதை சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவுதல்
*விவசாயிகளின் நிலங்களில் விதைப்பண்ணைகள் அமைத்து விதைகள் கொள்முதல்
*உயர் விளைச்சல் தரக்கூடிய ரகங்களின் சான்று விதைகள் 39,500 மெட்ரிக் டன் அளவில் விநியோகம்.
*நெற்பயிருக்கு மாற்றாக குறைந்த நீர்த் தேவையுள்ள பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்க, மாற்றுப்பயிர் சாகுபடித் திட்டம்
*ஆதி திராவிட பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளின் பொருளாதாரச் சுமையினைக் குறைக்கும் திட்டம்
*இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டம்
*பருத்தியின் உற்பத்தியை அதிகரித்திட பருத்தி உற்பத்திப் பெருக்குத் திட்டம்
*விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் 3,000 மெட்ரிக் டன் விதைகள் சுத்திகரிக்கப்பட்டுக் கொள்முதல்.
*பசுமைத் தமிழகத்தை உருவாக்க, தமிழக வேளாண்காடுகள் கொள்கை
*100 முன்னோடி விவசாயிகளை நெல் உற்பத்தித்திறனில் சாதனை அடைந்துள்ள ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லுதல்.
*தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் விதைகள், பிற இடுபொருட்கள் உழவர்களுக்கு விநியோகம்
நிதி ஒதுக்கீடு
*கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ரூ.297 கோடி
*கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டம் -ரூ.10.63 கோடி
*ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்- ரூ.125 கோடி
*ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சி திட்டம் - ரூ.35.26 கோடி
*கோடைக்காலப் பயிர்த் திட்டம் - ரூ.10.50 கோடி
*நுண்ணீர்ப் பாசனத் திட்டம் - ரூ.1,168 கோடி
*பாரம்பரிய காய்கறிகள் ரகங்களின் ஊக்குவிப்பு - ரூ.2.4 கோடி
*அறுவடைப் பின்செய் மேலாண்மை ஊக்குவிப்பு - ரூ.18 கோடி
*தினசரி வருமானம் ஈட்ட மலர்கள் சாகுபடி( விவசாயிகள் நிலையான வருமானம் ஈட்டும் வகையில் மலர்கள் சாகுபடியை ஊக்குவிக்க )- ரூ.8.51 கோடி
*தினசரி வருமானம் ஈட்ட மலர்கள் சாகுபடி( மல்லிகைக்கான சிறப்புத் திட்டம்)-1.60 கோடி
*தினசரி வருமானம் ஈட்ட மலர்கள் சாகுபடி( நறுமன ரோஜாவிற்கான சிறப்பு திட்டம்)-ரூ.1 கோடி
*சுவைதாளிதப் பயிர்களுக்கான சிறப்புத் திட்டம் - ரூ.11.74 கோடி
வேளாண் பட்ஜெட்டை முன்னிட்டு சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் பச்சை துண்டு அணிந்து பங்கேற்றனர்.


மேலும்
-
பா.ஜ. தலைவர் சுட்டுக்கொலை; நிலத்தகராறில் அண்டை வீட்டுக்காரர் ஆத்திரம்
-
5 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வழிவகை; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
-
மக்காச்சோள உற்பத்தியை மேம்படுத்த ரூ. 40 கோடி ஒதுக்கீடு; பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு
-
சென்னையில் நாய் கடித்ததில் வடமாநில தொழிலாளி பலி!
-
காரைக்குடியில் பழிக்குப்பழி கொலை செய்ய சதி; ஆயுதங்களுடன் சிக்கிய 4 பேர்
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 சரிவு