காரைக்குடியில் பழிக்குப்பழி கொலை செய்ய சதி; ஆயுதங்களுடன் சிக்கிய 4 பேர்

காரைக்குடி; காரைக்குடியில் பழிக்குப்பழி கொலையை அரங்கேற்ற சதி திட்டத்துடன் வீட்டில் பதுங்கியிருந்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் ஆயுதங்களுடன் கைது செய்தனர்.



இதுபற்றிய விவரம் வருமாறு;


காரைக்குடி உட்கோட்ட போலீசார் ரகசிய தகவலின் அடிப்படையில் பள்ளத்தூரில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். இதில், பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த நான்கு பேரை அவர்கள் கைது செய்தனர். விசாரணையில், 4 பேரும் காரைக்குடியில் மார்ச் 18 அன்று நடைபெறவுள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் பழிவாங்கும் நோக்கில் ஒரு கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.


கைது செய்யப்பட்டவர்கள் பெயர் விவரம்; அகிலன் (23), காரைக்குடி, பாண்டியன் (25), புதுக்கோட்டை, விஸ்வநாதன் (20) காரைக்குடி, வெங்கடேசன் (26) காரைக்குடி.


கொலைத் திட்டத்தின் பின்னணி


இந்த கொலைத் திட்டம் 2019ம் ஆண்டு குன்றக்குடியில் நடந்த கொலை வழக்குடன் தொடர்புடையது ஆகும். 2019ம் ஆண்டு ஜெயராமன் என்பவர் 6 பேர் கொண்ட கும்பலால் கொல்லப்பட்டார். இந்தக் கொலை, 2018ம் ஆண்டு முருகன் என்பவர் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலாக நடந்ததாக கூறப்படுகிறது.


இதனால், ஜெயராமனின் நெருங்கிய நண்பரான பாண்டி, பழிவாங்கும் நோக்கில் ஒரு குற்றவாளியை கொல்ல ஒரு குழுவை அமைத்து உள்ளார். இவர்களை போலீசார் ரகசிய தகவலின் பேரில் கைது செய்துள்ளனர்.


காவல்துறையின் வேகமான நடவடிக்கை காரணமாக, கோவில் திருவிழாவில் ஒரு கொலை சம்பவம் தடுக்கப்பட்டது. கைதான நால்வரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தக் குழுவின் மற்ற உறுப்பினர்களை பிடிக்க சிறப்பு போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது.


இது குறித்து மாவட்ட எஸ் பி ஆஷிஷ் ராவத் கூறுகையில், 'பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை பாயும்' என்றார்.

Advertisement