மோசடி நிதி நிறுவனங்களில் சிக்கிய ரூ.14,000 கோடி; முதலீட்டாளர் தவிப்பு

காஞ்சிபுரம்: சென்னை உட்பட பல இடங்களில் செயல்பட்டு வந்த ஆருத்ரா, ஹிஜாவு, ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக, முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறி, பல கோடி ரூபாய் பெற்று மோசடி செய்தன. இந்த நிதி நிறுவனங்கள் பிரபலமாக செயல்பட்டபோது, இந்நிறுவனங்கள் தந்த வட்டி தொகை பற்றி தமிழகம் முழுதும் பேச்சாக இருந்தது.
இவை மோசடி நிறுவனங்கள் என, தெரிந்த பின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில், 2 லட்சம் முதலீட்டாளர்களிடம், 14,000 கோடி ரூபாய்க்கு மேல் பெற்று மூன்று நிதி நிறுவனங்களும் மோசடி செய்தது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் நடவடிக்கை எடுப்பதற்குள், ஆருத்ரா நிதி நிறுவனஇயக்குநர்கள் ராஜசேகர், அவரது மனைவி உஷா; ஐ.எப்.எஸ்., நிதி நிறுவன இயக்குநர்கள் லட்சுமி நாராயணன், வேதநாராயணன், ஜனார்த்தனன், மோகன்பாபு ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றனர்.
முயற்சி
இவர்களில், ராஜசேகர்,ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில், 2023 டிசம்பரில் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை தமிழகம் அழைத்து வர, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முயற்சித்து வருகின்றனர். ஓராண்டாகியும் பலன் கிடைக்கவில்லை. ராஜசேகர் மனைவி உஷா பதுங்கி இருக்கும் இடம் குறித்து துப்பு துலக்க முடியவில்லை.
சமீபத்தில், தாய்லாந்து தலைநகரில் இருந்து, நாடு கடத்தப்பட்டு, கொல்கட்டா வந்த ஐ.எப்.எஸ்., நிதி நிறுவன இயக்குநர்களில் ஒருவரான ஜனார்த்தனன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து மற்ற மூன்று இயக்குநர்களும், வெளிநாடுகளில்தலை மறைவாகவே உள்ளனர்.
ஹிஜாவு நிதி நிறுவன இயக்குநர்கள் அலெக்சாண்டர், அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோர், எந்த நாட்டில் இருக்கின்றனர் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், நிதி நிறுவன மோசடி வழக்குகள் விசாரணை, எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளதால், முதலீட்டாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிதி நிறுவனங்களில், வேலுாரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஐ.எப்.எஸ்., நிதி நிறுவனத்தின் கிளைகள், சென்னை, காஞ்சி புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக பிரபலமாக இயங்கின.
கொரோனா காலகட்டமான 2020- 21ல் துவங்கிய ஐ.எப்.எஸ்., நிதி நிறுவனத்தில், 1 லட்ச ரூபாய்க்கு, மாதம் 6,000 ரூபாயை அந்நிறுவனம் வட்டியாக அளித்ததால், பலரும் முதலீடு செய்தனர்.
ஏஜென்டுகள் கைது
இந்நிறுவன இயக்குநர்கள் வெளிநாடு தப்பியோடி விட்டதால், ஏஜென்டுகள் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். ஏஜென்டுகள் சிலரை கைது செய்தனர். காஞ்சிபுரத்தில் மின்மினி சரவணன் என்பவரை போலீசார் கைது செய்து, அவர் மூலம் கிடைத்த தகவல் அடிப்படையில் பல ஏஜென்டுகளை பிடித்தனர்.
இருப்பினும், சென்னை கோட்டூர்புரம் ஏரிக்கரை சாலையில் வசித்து வந்த, முக்கிய ஏஜென்ட் தமிழ்செல்வன் குறித்த தகவல் ஏதுமில்லை. தொடர்ந்து குடும்பத்துடன் அவர் தலைமறைவாகவே உள்ளார். தமிழ்செல்வன் சுமார் 199 கோடி ரூபாய் வரை முதலீட்டாளர்களிடம் வசூலித்ததாக, இவரிடம் ஏமாந்தவர்கள், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் 2023 ஏப்., மே மாதங்களில் இருந்து தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.
மேலும் இவரிடம் பணிபுரிந்த உதவி ஏஜென்ட் ஓய்வு பெற்ற எஸ்.ஐ., வேலாயுதராஜன் என்பவரும் தமிழ்செல்வன் வழியாக சுமார் 5 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்.மேலும் வேலாயுதராஜன் திருநெல்வேலி, தென்காசியை சேர்ந்த அவரது உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் லட்சக்கணக்கில் வசூலித்து, தமிழ்செல்வனிடம் வழங்கியுள்ளார்.
இதனால் பணத்தை இழந்தவர்கள் ஏஜென்ட் தமிழ்செல்வன் மீதும், உதவி ஏஜென்ட் வேலாயுதராஜன் மீதும், சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்துள்ளனர். புகார் அளித்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. எந்தவித முன்னேற்றமும் இல்லை.
தற்கொலை
முதலீடு செய்தவர்களில் பலர் ஆரம்ப காலகட்டத்தில் 15 மாதங்கள் வரை வட்டி வாங்கியுள்ளனர். இதில் அப்பாவிகளான சிலர் முதலீடு செய்த ஒரு மாதம் மட்டும் வட்டி வாங்கியுள்ளனர். முதலீடு செய்த அடுத்த மாதமே நிதி நிறுவனம் கம்பி நீட்டியது.
முதலீடு செய்த லட்சணக்கான பணம் திரும்ப கிடைக்காததால், பலரதுகுடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விட்டது.
லட்சக்கணக்கான ரூபாய் கடனாளி ஆகினர். பலர் நகை, வீடு அடமானம் வைத்து முதலீடு செய்திருந்தனர். அதுபோன்ற பலரும் பாதிக்கப்பட்டு, இன்று வரை முதலீடு பணம் திரும்ப கிடைக்காமல் அவதிப் படுகின்றனர். கடன் தொல்லையால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிலர் தற்கொலை செய்து கொண்டனர்.
பலரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய இந்த நிதி நிறுவன மோசடி பற்றி போதிய தகவல்களும் போலீசாரிடம் இருந்து முதலீட்டாளர்களுக்கு கிடைக்காததால், பாதிக்கப்பட்டோர் புலம்பி வருகின்றனர். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரம், முதலீடு பணம் திரும்ப கிடைக்க என்ன செய்யவேண்டும் என தெளிவான விளக்கம் ஆகியவற்றை, போலீசார் அளிக்க வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் தலையிட்டு, முதலீட்டாளர்களுக்கு பணம் கிடைக்க காவல் துறையை முடுக்கி விட வேண்டும் என, ஆருத்ரா, ஹிஜாவு, ஐ.எப்.எஸ்., அன்னை கேபிட்டல் உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் எதிர்பார்க்கின்றனர்.



மேலும்
-
சென்னையில் நாய் கடித்ததில் வடமாநில தொழிலாளி பலி!
-
கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரம் மானியம்; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
-
காரைக்குடியில் பழிக்குப்பழி கொலை செய்ய சதி; ஆயுதங்களுடன் சிக்கிய 4 பேர்
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 சரிவு
-
5 ஆண்டுகளில் 100 புலிகளை கொன்ற பவேரியா கொள்ளை கும்பல்; விசாரணையில் பகீர்
-
பாக்., காஷ்மீர் நிலைப்பாட்டை ஏற்க முடியாது; ஐ.நா.,வில் இந்தியா திட்டவட்டம்