வாரிசு சான்று வழங்க ரூ.3,500 லஞ்சம்: குளத்தில் குதித்த வி.ஏ.ஓ.,வை அமுக்கிய போலீசார்

3


கோவை: லஞ்சப் பணத்துடன் குளத்தில் குதித்த வி.ஏ.ஓ.,வை, பின்னால் துரத்தி வந்த போலீசார் கையும், களவுமாக பிடித்தனர். தற்போது, குளத்தில் விழுந்த லஞ்ச பணத்தை தேடும் பணியில், லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை, தொம்பிலிபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர், வாரிசு சான்று வாங்க, விண்ணப்பித்து இருந்தார். சான்று வழங்குவதற்கு, மத்வராயபுரம் வி.ஏ.ஓ.,வாக பணியாற்றி வரும் வெற்றிவேல், என்பவர் 3,500 ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டுள்ளார்.
லஞ்சம் தர முடியாது என, கிருஷ்ணசாமி கூறியுள்ளார். இதனால், சான்று வழங்காமல், வி.ஏ.ஓ., வெற்றிவேல் காலம் தாழ்த்தி வந்தார்.



இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில், கிருஷ்ணசாமி புகார் அளித்தார். நேற்று இரவு, பேரூரில் வைத்து வெற்றிவேலிடம் பணத்தை கொடுத்துள்ளார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பிடிக்க முயன்றபோது, வெற்றிவேல், தனது இருசக்கர வாகனத்தில் தப்பினார்.


சிறிது தூரம் சென்றபோது, பேரூர் பெரியகுளத்திற்குள், பணத்துடன் வி.ஏ.ஓ., வெற்றிவேல் குதித்து விட்டார். பின்னால், துரத்தி வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும், குளத்தில் குதித்து, வெற்றிவேலை பிடித்தனர்.


ஆனால், ரசாயனம் தடவிய பணம், குளத்தில் விழுந்தது. இதையடுத்து, வெற்றிவேலை, பேரூர் தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து வந்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். மற்றொருபுறம், குளத்தில் விழுந்த ரசாயனம் தடவிய பணத்தை தேடி எடுத்தனர். பின், வி.ஏ.ஓ.,வை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.



தற்போது, குளத்தில் விழுந்த லஞ்ச பணத்தை தேடும் பணியில், லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement