கட்டுமான ஒப்பந்தத்துக்கு மாற்று வழி தெரியாமல் வீடு வாங்குவோர் அவதி! கான்கிரீட் கட்டுமானங்களுக்கு ரெடிமேட் கம்பிகளை வாங்குவதில் கவனிக்க…

தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு விற்பனையின் போது பொதுவாக, 2 வகை பத்திரங்கள் பதிவு செய்யப்படும். இதில் முதலாவதாக, அந்த வீட்டில் நிலத்தின் பிரிபடாத பங்கான யு.டி.எஸ்., அடிப்படையில் ஒரு பத்திரம் பதிவு செய்யப்படும்.

இதற்கான பத்திரப்பதிவின் போது, நிலத்தின் வழிகாட்டி மதிப்பு என்ன என்று பார்த்து அதன் மொத்த மதிப்பில், 9 சதவீத தொகையை முத்திரை தீர்வை, பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த பத்திரத்தில் சொத்து குறித்த முந்தைய பரிமாற்ற விபரங்கள், பட்டா மற்றும் இதர விபரங்கள் தெரிவிக்கப்படும்.

இதற்கு அடுத்தபடியாக, கட்டுமான ஒப்பந்தம் என்ற பெயரில் ஒரு பத்திரம் தயாரிக்கப்படும். இதில் உங்களுக்கான வீட்டின் அளவு, அதில் இடம் பெறும் வசதிகள், வாகன நிறுத்துமிடம், கட்டுமான பொருட்கள், மின்சார இணைப்பு போன்ற விஷயங்கள் தெளிவாக குறிப்பிடப்படும்.

குறிப்பாக, கட்டுமான பணி எப்போது துவங்கப்படும், எப்போது முடித்து வீடு ஒப்படைக்கப்படும் என்பதை கட்டுமான நிறுவனம் தெளிவாக குறிப்பிட வேண்டும். கட்டுமான பணிக்கான உத்தேச கால அட்டவணையை அதில் தெளிவாக குறிப்பிடுவது தேவையற்ற குழப்பங்களை தடுக்க உதவும்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை கட்டுமான ஒப்பந்தம் என்பது பெயரளவுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சட்ட ரீதியாக அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கட்டுமான ஒப்பந்தங்களை பதிவு செய்வதை அரசு கட்டாயமாக்கியது.

இந்நிலையில், ரியல் எஸ்டேட் சடடப்படி குடியிருப்பு திட்டங்களை பதிவு செய்வதில் கட்டுமான ஒப்பந்தங்கள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால், தமிழக அரசு அடுக்குமாடி குடியிருப்பு திட்ட வீடுகளை பதிவு செய்வதில் கூட்டு மதிப்பு முறையை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது.

இதில் கட்டுமான ஒப்பந்தம் என்று ஒரு பத்திரத்தை தனியாக தயாரிப்பதற்கும், பதிவு செய்வதற்கும் எந்த வழிவகையும் செய்யப்படவில்லை. இதனால், கட்டுமான ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டிய விஷயங்களை எங்கு எப்படி தெரிவிப்பது என்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கட்டுமான ஒப்பந்தம் இல்லாத பரிமாற்றங்களுக்கு வங்கிகள் வீட்டுக்கடன் கொடுக்கவும் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ரியல் எஸ்டேட் ஆணைய பதிவு, வங்கிக்கடன் ஆகிய நிலைகளில் பயன்படுத்தும் வகையில் கட்டுமான ஒப்பந்தத்துக்கு மாற்று ஆவணத்தை பரிந்துரைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என கட்டுமான பொறியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement