நாக்பூர் கலவரம் திட்டமிட்ட சதி: முதல்வர் பட்னவிஸ் ஆவேசம்! தடை உத்தரவு அமல்; 45 பேர் கைது

8

நாக்பூர் : ''மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த கலவரம், குறிப்பிட்ட சிலரால் திட்டமிட்டு செய்யப்பட்ட சதியாக தெரிகிறது,'' என, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறியுள்ளார். துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.


மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள சத்ரபதி சம்பாஜி மாவட்டத்தில், முகலாய மன்னர் அவுரங்கசீபின் சமாதி உள்ளது. மராட்டிய மன்னர் சத்ரபதி சம்பாஜியின் வாழ்க்கை தொடர்பான சாவா என்ற ஹிந்தி திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

வலியுறுத்தல்



இதில், சத்ரபதி சம்பாஜியை மதம் மாற்றம் செய்வதற்கு அவுரங்கசீப் முயன்று, கொடூரமாக கொலை செய்தது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதைத் தொடர்ந்து, அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.


அதே நேரத்தில், அவுரங்கசீபை பெருமைப்படுத்தும் வகையில், முஸ்லிம் பிரிவினர் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.


இந்நிலையில், நாக்பூரில், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் சார்பில் நேற்று முன்தினம் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அப்போது முஸ்லிம்களின் புனித நுால் அவமதிக்கப்பட்டதாக வதந்தி பரவியதைத் தொடர்ந்து, கல்வீசி தாக்குவது, வாகனங்களுக்கு தீ வைப்பது போன்ற சம்பவங்கள் நடந்தன.


ஒரு கட்டத்தில் போலீசார் மீதும், முஸ்லிம் தரப்பினர் தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகை குண்டு பயன்படுத்தப்பட்டு, கூட்டத்தை போலீசார் கலைத்தனர். நாக்பூரில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து, அங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு பதிவு



இந்த சம்பவங்கள் தொடர்பாக, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், சட்டசபையில் நேற்று கூறியதாவது: சமீபத்தில் வெளியான சாவா ஹிந்தி திரைப்படத்தில், அவுரங்கசீபின் கொடூரங்கள் விளக்கப்பட்டுள்ளன.

சத்ரபதி சிவாஜியின் மகனான சத்ரபதி சம்பாஜியை அவுரங்கசீப் கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்தது தொடர்பான காட்சிகள், மஹாராஷ்டிரா மக்களின் உணர்வுகளை துாண்டி விட்டுள்ளது. இதையடுத்து, அவுரங்கசீப் சமாதியை அகற்ற கோரிக்கைகள் வலுவடைந்துள்ளன.

இந்த விஷயத்தில் மக்களின் உணர்வுகளை துாண்டும் வகையில், அவுரங்கசீபை பெருமைப்படுத்தும் வகையில் சிலர் கருத்து தெரிவித்துஉள்ளனர். அவரை பெருமைப்படுத்தும் வகையில் சில சம்பவங்களும் நடந்துள்ளன.

இதையடுத்து, சில ஹிந்து அமைப்புகள் சார்பில் நாக்பூரில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, அவுரங்கசீப் சமாதியைப் போன்ற மாதிரியை உருவாக்கி அதை எரித்துள்ளனர்.

இது குறிப்பிட்ட மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக, ஹிந்து அமைப்புகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போலீசார் காயம்



இதற்கிடையே, போராட்டக்காரர்கள் எரித்த சமாதியின் மாதிரியில், புனித நுாலின் சில வாக்கியங்கள் இருந்ததாக புரளி பரவியுள்ளது. இதையடுத்து, 200 - 300 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய போலீசார், போலீஸ் ஸ்டேஷன் வந்து புகார் அளிக்கும்படி கூறினர்.

மேலும், ஹன்சாபுரி பகுதியில் 300 பேர் குவிந்து, கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதுவும் குறிப்பிட்ட சிலருடைய வீடுகள், கடைகள் மீது தாக்குதல் நடந்துள்ளது.

பல்தார்புரா பகுதியில் குவிந்தவர்கள், தடுக்க வந்த போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், மூன்று துணை போலீஸ் கமிஷனர்கள் உட்பட, 34 போலீசார் காயமடைந்துள்ளனர். இதில் ஒரு துணை போலீஸ் கமிஷனர், கோடரியால் வெட்டப்பட்டுள்ளார்.

மேலும், வாகனங்களுக்கு தீ வைப்பது போன்றவற்றில் ஈடுபட்டனர். இதையடுத்தே, கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.

நடந்த சம்பவங்களை பார்க்கும்போது, திட்டமிட்டே சிலர் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளது தெரியவருகிறது. தாக்குதல் நடத்துவதற்காக கற்களை குவித்து வைத்துள்ளனர். குறிப்பிட்ட சில வீடுகள் உள்ளிட்டவற்றில் தாக்குதல் நடந்துள்ளது. இதில் இருந்து, இது திட்டமிட்ட சதியாகவே தெரிகிறது. போலீசார் அது தொடர்பாக விசாரிப்பர். இவ்வாறு அவர் கூறினார்.

பதற்றம்



சிவசேனா தலைவரும், துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டேயும், இந்த வன்முறையின் பின்னணியில் சதி உள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், நாக்பூரில் நேற்றும் சில இடங்களில் தடை உத்தரவு தொடர்ந்தது. பொதுவாக அமைதியாக இருந்தாலும், பதற்றமான சூழ்நிலையே உள்ளது. பாதுகாப்புப் பணியில் அதிகளவு போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வன்முறை சம்பவங்களில், 34 போலீசார் காயமடைந்துள்ளதாகவும், 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வதந்தியை நம்ப வேண்டாம்



நாக்பூர் எப்போதுமே அமைதியான பாரம்பரியத்துக்கு பெயர் பெற்றது. நாக்பூர் மக்கள் சமூக வலைதளங்களில் பரவும் எந்த ஒரு வதந்தியையும் நம்ப வேண்டாம். பொறுமையை பின்பற்றவும். அவசியம் இல்லாமல் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம். போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். - --நிதின் கட்கரிமத்திய அமைச்சர், பா.ஜ.,

Advertisement