ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறதாம்; கூட்டல் கழித்தல் கணக்குக்கு இ.பி.எஸ்., பதிலடி

12

சென்னை: அ.தி.மு.க., கூட்டல் கழித்தல் கணக்கில் ஏமாறாமல் இருந்தால் மகிழ்ச்சி தான் என கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு, 'எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். எங்கள் மீது நீங்கள் கரிசனம் காட்ட வேண்டாம்' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பதில் அளித்தார்.

சென்னை சட்டசபை வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது:

தி.மு.க., ஆட்சி வந்த பிறகு கடந்த நான்கு ஆண்டுகளில் 4.5 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றதாக தெரிகிறது. நிதி மேலாண்மை தொடர்பான குழு அரசுக்கு என்ன அறிக்கை தாக்கல் செய்தது. ஏதோ புள்ளி விவரத்தை சொல்லி மக்களை ஏமாற்று பார்க்கிறது தி.மு.க., அரசு.



அரசின் கடன் தொடர்பாக எந்த வெள்ளை அறிக்கையும் வெளியிடவில்லை. அரசின் கடன் குறித்த கேள்விக்கு உரிய பதில் இல்லை. பட்ஜெட் மீதான அமைச்சரின் பதிலுரை ஏமாற்றம் தருகிறது. வெறும் வார்த்தை ஜாலங்களாக தான் உள்ளன. தி.மு.க., ஆட்சியில் மின்கட்டணம் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இ.பி.எஸ்., பதில்!



சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது, அ.தி.மு.க., கூட்டல் கழித்தல் கணக்கில் ஏமாறாமல் இருந்தால் மகிழ்ச்சி தான் என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்து இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது: பட்ஜெட் கணக்கை சரியாக செயல்படுத்துங்கள். எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.



ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம், எங்கள் மீது நீங்கள் கரிசனம் காட்ட தேவையில்லை. நீங்கள் எப்படி எல்லாம் கடந்த காலம் இருந்ததை எண்ணி பார்க்க வேண்டும். அ.தி.மு.க.,வை பொறுத்தவரைக்கும் கொள்கை என்பது வேறு; கூட்டணி என்பது வேறு. இரண்டையும் சேர்த்து பார்க்க வேண்டாம்.

தன்மானம்



தேர்தல் வரும் போது கூட்டணியை முடிவு செய்வோம்; எங்களது கொள்கை நிரந்தரமானது. அறிவாலயத்தில் மேல்மாடியில் சி.பி.ஐ., விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. கீழே காங்கிரஸ் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது. இதுதான் அவர்களது நிலைமை.



அ.தி.மு.க., ஒரு போதும் தன்மானத்தை இழக்காது. எங்களுக்கு வேணும் என்றால் வேண்டும். வேண்டாம் என்றால் வேண்டாம் என்பதை நிலைப்பாடாக கொண்டுள்ளது. தமிழக மக்கள் பாதிக்கப்படும் திட்டத்தை எதிர்ப்பதில் முதன்மையாக இருப்போம். தி.மு.க., அகற்றப்பட வேண்டிய அரசு. அது தான் எங்களுடைய கொள்கை.

நிலைப்பாடு



அதுதான் எங்களுடைய நிலைப்பாடு. மற்றவர்கள் எல்லாம் எங்களுக்கு எதிரியே கிடையாது. கட்சி ரீதியாக எங்களுக்கு எதிரி தி.மு.க., மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் அகற்றப்பட வேண்டும். தி.மு.க., அரசு 2026ல் மக்கள் துணையோடு அகற்றப்படும். இது உறுதி. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.

Advertisement