யானை தாக்கி ஒருவர் காயம்: வனத்துறை விசாரணை

கூடலுார்: கூடலுார் தேவர்சோலை அருகே, தனியார் தேயிலை தோட்ட பகுதியில், காட்டு யானை தாக்கி ஒருவர் காயமடைந்தார்.

கூடலுார், தேவர்சோலை மூலவயல் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்,45. இவர் நேற்று முன்தினம், தேவர் சோலையிலிருந்து தனியார் தேயிலை தோட்டம் வழியாக, வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அவரை காட்டு யானை தாக்கியுள்ளது. அதில், காயமடைந்த அவர், நடந்து செல்ல முடியாமல் தேயிலை தோட்டத்தில் கிடந்துள்ளார்.

நேற்று, காலை வேலைக்கு சென்ற தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள், சுரேஷ் யானை தாக்கி, காயத்துடன் உயிருக்கு போராடுவது தெரியவந்தது. வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அவரை மீட்டு சிகிச்சைக்காக, கூடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement