போதை மருந்து பயன்படுத்திய ஒன்பது பேருக்கு எச்.ஐ.வி., மாநில எல்லையில் உள்ள மக்கள் அதிர்ச்சி

பந்தலுார்: நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே, கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் அமைந்துள்ளது.

இப்பகுதியில், கர்நாடகா மாநிலத்திலிருந்து, கூடலுார் வழியாக போதை பொருட்கள் கடத்தி செல்லும் பலரையும், இரு மாநில போலீசார் அவ்வப்போது கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த வாரம், கேரளா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், தொடர்ச்சியாக போதை பொருட்கள் பயன்படுத்தும் நபர்களின் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.

அதில், மலப்புரம் வாளாஞ்சேரி பகுதியில் போதை ஊசி பயன்படுத்திய ஒரு குழுவை சேர்ந்த, 9 பேருக்கு, எச்.ஐ.வி. தொற்று இருந்தது தற்போது தெரிய வந்துள்ளது. அதில், மூன்று பேர் வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் ஆறு பேர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள். இதனால், 'இவர்களுடன் தொடர்பில் இருந்த பலருக்கும், எச்.ஐ.வி., தொற்று பரவி இருக்கக்கூடும்,' என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால், இரு மாநில எல்லையில், போதை ஊசி பயன்படுத்தி வந்த பலரும் அச்சமடைந்துள்ளனர்.

கேரள சுகாதார துறையினர் கூறுகையில்,'மாநில எல்லையில் போதை பொருட்கள் பயன்பாட்டில் உள்ளவர்கள் எச்.ஐ.வி., பரிசோதனை செய்து கொண்டால் உடலுக்கு நல்லது. பெயரை வெளியிட மாட்டோம். அதேபோல, போதை பழக்கத்துக்கு இளைஞர்கள் அடிமையாகாமல் இருந்தால், இது போன்ற நோய் தொற்றுகள் பரவாது,' என்றனர்.

Advertisement