கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை முடங்க வாய்ப்பு

பெங்களூரு; கர்நாடகாவில் நாளை (மார்ச் 22) முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கன்னட ஆதரவு அமைப்புகள் போராட்டம் அறிவித்து இருந்தாலும் கல்வி நிலையங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.



அண்மையில் பெலகாவில் மராத்தி மொழி பேசுபவர்களால் கர்நாடக பஸ் கண்டக்டர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நாளை (மார்ச் 22) மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை போராட்டம் நடைபெறுகிறது.


முழு அடைப்பை மாநில அரசு ஆதரிக்காததால், கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகள் எப்போதும் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பஸ்கள், ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


ஓலா, உபர் டிரைவர்கள், ஆட்டோ ரிக்ஷா தொழிற்சங்கங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஓட்டல் மற்றும் திரைத்துறையினரும் போராட்டத்தை ஆதரித்துள்ளனர். முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் பலத்த கண்காணிப்பும், போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

Advertisement