படாளம் சர்க்கரை ஆலை பணம் தராமல் இழுத்தடிப்பு நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், நேற்று நடந்தது.

இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், குண்டுபெரும்பேடு மற்றும் பெருநகர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு, 27 லட்ச ரூபாய் மதிப்பிலான டிராக்டர் மற்றும் வைக்கோல் கட்டும் இயந்திரங்களும், களியாம்பூண்டி சங்கத்திற்கு 12.50 லட்சம் மதிப்பிலான டிராக்டர் மற்றும் டிரைலரை கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.

மேலும், மதுரமங்கலம் சங்கத்திற்கு 5.92 லட்சம் மதிப்பிலான வைக்கோல் கட்டும் இயந்திரம் மற்றும் குழியிடும் கருவியையும் கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார். விவசாய பயனாளிகளுக்கு, சுழல் கலப்பை, விசை கலப்பை போன்ற வேளாண் உபகரணங்களும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் வாயிலாக திருப்புலிவனம் உத்தரகாஞ்சி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு வேர்க்கடலை உடைக்கும் இயந்திரத்திற்கு 6.89 மதிப்பிலான காசோலை வழங்கினார்.

உத்திரமேரூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு உளுந்து தோல் நீக்கும் இயந்திரத்திற்கு 3.71 லட்சம் மதிப்பிலான காசேலை மற்றும் வேளாண் தொழில் முனைவோர் திட்டத்தின்கீழ் மூன்று விவசாய பயனாளிகளுக்கு மரச்செக்கு இயந்திரத்திற்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டன. தொடர்ந்து, 10 விவசாய பயனாளிகளுக்கு 4.79 லட்சம் மதிப்பில் பயிர்க் கடன்களும், ஐந்து விவசாய பயனாளிகளுக்கு 6,194 ரூபாய் மதிப்பில் வேளாண் இடு பொருட்களையும், கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்

இதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:

விவசாயிகள்: மத்திய அரசின் விவசாயிகள் அடையாள அட்டை பெறுவதற்கு, நில ஆவணங்கள் கேட்கின்றனர். ஆனால், என் தந்தை பெயரில் ஆவணங்கள் உள்ளதால், எப்படி நான் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

கலைச்செல்வி, கலெக்டர்: ஆவணங்களை விவசாயிகள் அவரவர் பெயரில் இப்போதே மாற்றிக் கொள்ளுங்கள். அதற்கான நடவடிக்கையை தீவிரபடுத்த சொல்கிறேன்.

விவசாயிகள்: கூட்டு பட்டா பிரச்னை காரணமாக, அடையாள அட்டை பெறுவதிலும், நலத்திட்டங்கள் பெறுவதிலும் சிக்கல் உள்ளது.

கலைச்செல்வி, கலெக்டர்: கூட்டு பட்டா விவகாரம் தொடர்பாக பிரச்னையை அரசுக்கு தெரிவிக்கிறோம். விரைவில் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகள்: உத்திரமேரூர் பகுதியில் விவசாயிகள் பயிரிடும் மிளகாய் சாகுபடியில் பிரச்னை உள்ளது. எங்கள் பகுதியில் மிளகாய் செடிகளில் காய்ப்பு தன்மை சரிவர இல்லாததால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

கலைச்செல்வி, கலெக்டர்: தோட்டக்கலைத் துறை வாயிலாக நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகள்: உத்திரமேரூர் பகுதியில் விவசாயிகள் கரும்பு தொழிலை விட்டு நாளுக்கு நாள் வெளியேறி வருகின்றனர். படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்புக்கு இன்னமும் பணம் வழங்கவில்லை. கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் செய்ய கடன் பெற்ற தொகைக்கு வட்டி போடுகின்றனர். அதே கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் சர்க்கரை ஆலை பணம் தராமல் இழுத்தடிக்கிறது.

விவசாயிகள்: தொடூர் கிராமத்தில் உள்ள குளத்தை சீரமைத்து தர வேண்டும்.

கலைச்செல்வி, கலெக்டர்: சிறிய நீர்நிலைகளை சீரமைக்க தனி நிதி ஒதுக்கீடு இல்லை. விவசாயிகளே நீர்நிலைகளில் வண்டல் மணல் எடுக்க அனுமதித்தோம். அவற்றையும் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

விவசாயிகள்: காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்ல அரசு சார்பில் அறிவிப்பு வெளியானது. அடுத்தகட்ட நடவடிக்கை இல்லையே.

ரவி மீனா, வனத்துறை: ஒவ்வொரு கிராமங்களிலும் கமிட்டி அமைத்துள்ளோம். காப்பு காட்டில் இருந்து 3 கி.மீ., துாரத்திற்கு மேல் உள்ள இடங்களில் விவசாய நிலங்களை நாசம் செய்யும் பன்றிகளை சுடுவோம். மேலும், பயிர் சேதம், பன்றிகள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்து, சுடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகள்: காப்பு காட்டுக்கு அருகே உள்ள விவசாய நிலங்களில் பன்றிகள் சேதமானால், அவற்றை தடுக்க என்ன செய்வீர்கள்? எல்லை வரையறை என்பது எங்களால் ஏற்க முடியாது.

ரவி மீனா, வனத்துறை: காப்பு காடு அருகே திரியும் பன்றிகளை பிடித்து வெளியே துாரமாக கொண்டு சென்று விடுகிறோம்.

இவ்வாறு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Advertisement