நெடுஞ்சாலையில் மீடியனை உடைத்து கடைக்கு பாதை; வல்லத்தில் அத்துமீறல்

ஸ்ரீபெரும்புதுார், வண்டலுார் -- வாலாஜாபாத், சென்னை -- திருச்சி, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளை, இணைக்கும் முக்கிய சாலையாக ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை உள்ளது.

ஒரகடம், வல்லம் -வடகால், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்சாலைகளுக்கு செல்லும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் சென்று வருகின்றன.

வாகன போக்குவத்து அதிகம் உள்ள இந்த சாலையோரம், உணவகம், டீக்கடை உள்ளிட்ட கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், இந்த சாலையோரம் உள்ள இந்த கடைகளுக்கு செல்ல, பல இடங்களில் நெடுஞ்சாலையின் மீடியனை உடைத்து பாதை உருவாக்கி வருகின்றனர்.

இதனால், சர்வீஸ் சாலையில் இருந்து, பிரதான சாலைக்குள் வேகமாக நுழையும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்த சாலையோரம் ஸ்ரீபெரும்புதுார் மார்க்கமாக, வல்லம் பகுதியில், புதிதாக பிரமாண்ட டீக்கடை சமீபத்தில் திறக்கப்பட்டது.

இந்த கடைக்கு செல்ல, 20 அடிக்கு மேல் நெடுஞ்சாலை மீடியன் உடைக்கப்பட்டு பாதை உருவாக்கப்பட்டுள்ளது. கடைக்காரர்களே சாலையை மீடியனை உடைத்துள்ளனர்.

சாலையோரம் புதிதாக வரும் கடைகளுக்கு எதிரே இது போன்று மீடியனை உடைத்து பாதை உருவாக்கப்படுவதால் விபத்துக்கள் அதிகரிப்பதாகவும், நெடுஞ்சாலைத் துறையினர் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஒருவர் கூறுகையில், 'மீடியனை உடைக்க நெடுஞ்சாலைத் துறையிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. சம்பந்தப்பட்ட அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, அத்துமீறலில் ஈடுபட்டது உறுதி செய்யும்பட்சத்தில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Advertisement