ஆக்கிரமிப்பு பிடியில் நீர்நிலைகள்: நேரு எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

புதுச்சேரி: பூஜ்ய நேரத்தில் நேரு எம்.எல்.ஏ., பேசியதாவது:

பிரெஞ்சு ஆட்சியில் புதுச்சேரியின் நீர்நிலைகளை பாதுகாத்து அதற்கேற்ப கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டது. அதன் மூலம் மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்தனர்.

இப்படி கட்டமைக்கப்பட்ட நீர்நிலைகளை பாதுகாக்க தவறியதால் பெரும்பாலான நீர்நிலைகள் புதுச்சேரியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஒரு சில தனியார் வியாபார நிறுவனங்கள் நடத்துவோர் ஆதாயம் அடைய பாசன வாய்க்கால் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால்களை தாரைவார்க்கும் செயலில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். இந்நிலை தொடர்ந்தால் நீர்நிலைகள் எல்லாம் காணாமல் போய்விடும்.

நீர்நிலைகளை தனிநபர்கள் ஆக்கிரமிக்க அதிகாரிகளும் துணைபோகி கொண்டிருப்பதால் மழைக்காலத்தில் மழைவெள்ளம் எளிதாக பாசன வாய்க்கால்கள் மற்றும் வெள்ள வடிகால் வாய்க்கால்கள் மூலம் வெளியேறாமல் தடைபடுகிறது. நகரில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்களின் வீடுகளில் உட்புகுந்து அவர்களது உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்படுவதுடன் பெரும் சேதத்தையும் ஏற்படுத்துகிறது.

மத்திய மாசு கட்டுப்பாடுவாரியம் நீர்நிலைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு அருகே சில வியாபார நிறுவினங்கள் தொடங்குவதற்கு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது.

அதை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களும் தங்களது தீர்ப்புகளின் மூலம் உறுதியாக பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

சோழர் காலத்திலேயே நீர்நிலைகளை பாதுகாக்க தவறியிருந்தாலும் அந்த நீர்நிலைகளை அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியிருக்கிறார்கள்.

ஆகையால் புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப்பகுதியில் உள்ள நீர்நிலைகளையும், பாசன வாய்க்கால்களையும், மழைநீர் வடிகால் வாய்க்கால்களை கழிவுநீர் கலக்காமல் தடுக்க வேண்டும்.

அவற்றில் மழைநீரை தேக்கி மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement