'ஓய்வூதியர்களுக்கு நிலையான மருத்துவப்படி வழங்க வேண்டும்' அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கோரிக்கை

புதுச்சேரி: பூஜ்ய நேரத்தில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பேசியதாவது:

மத்திய அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மாதந்தோறும் நிலையான மருத்துவபடியாக 1,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து புதுச்சேரி அரசாங்கம் நிதித்துறை சார்பு செயலர் மூலம் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் ஆணை பிறப்பித்தது. அந்த அரசு ஆணையைப் பின்பற்றி புதுச்சேரி அரசின் கருவூலம் இதுவரை எந்த சுற்றறிக்கையும் தேசிய பென்ஷன் திட்ட ஓய்வூதியம் திட்டத்தின்கீழ் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அனுப்பவில்லை. அதை நடைமுறைப்படுத்த அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குரூப் - ஏ பணியில் ஓய்வு பெற்ற ஒரு உதவி பேராசிரியர் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 70 ஆயிரம் சம்பளம் வாங்கினார். அவர் ஓய்வு பெற்றபோது தன்னுடைய சேமிப்பு பணத்தில் ஏறக்குறைய ரூ.10.75 லட்சம், அதாவது 40 சதவீதம் புதிய பென்ஷன் திட்டத்தில் மத்திய அரசு வழிகாட்டிய நிறுவனங்களில் இருப்பு வைத்துவிட்டு ரூ.5135 தான் பென்ஷன் வாங்குகிறார். அதைவிட மோசமாக குரூப்-சி பணியில் ஓய்வு பெற்றவர்கள், 14 ஆண்டு முடித்தவர்கள் தன்னுடைய பங்குத்தொகை 40 சதவீதத்தை மத்திய அரசு சொல்லிய இடத்தில் வைப்புத் தொகையாக வைத்துவிட்டு முதல்வர் முதியோர்களுக்கு கொடுக்கின்ற ஓய்வூதிய தொகையான ரூ.2,500 விட குறைவாக ரூ.1849 தான் பென்ஷனாக பெறுகின்றனர்.

இந்த சூழ்நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ள நிலையான மருத்துவபடி ஓய்வூதியர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும். இந்த மருத்துவபடியை வழங்குவதற்கு கருவூலம் மூலமாக அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி தெரியப்படுத்த வேண்டும். உடனடியாக நிலையான மருத்துவபடி இந்த மாதம் முதல் கிடைக்க முதல்வர் கருணை உள்ளத்தோடு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement