விழுப்புரம் ரயில் நிலையத்தில் 'எஸ்கலேட்டர்' தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தகவல்

விழுப்புரம்: 'விழுப்புரம் ரயில் நிலையத்தில், எஸ்கலேட்டர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் விரைவில் செய்யப்படும்' என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் சிங் தெரிவித்தார்.

விழுப்புரம் ரயில் நிலையம் பசுமை ரயில் நிலையமாக அறிவிக்கப்பட்டு அதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் குறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளர் சிங் நேற்று காலை ஆய்வு செய்தார்.

பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'பொதுமக்களின் தேவைக்கேற்க விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தேவைக்கேற்ப கூடுதலாக மின்சார ரயில்கள் இயக்கப்படும். ரயில் டிக்கெட்டுகள் மொபைல் ஆப் மற்றும் வெண்டிங் மெஷின் மூலம் வழங்கப்படுவதால் அதனை ரயில் பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

விழுப்புரம் ரயில் நிலையத்தில் மின் துாக்கி படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது.

செப்டம்பர் மாதத்திற்குள் ரயில் நிலையம் முழுதும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்படும். பொதுமக்கள் பாதிக்காத வகையில் கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் செய்து தரப்படும்' என்றார்.

திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன், முதன்மை தலைமை பொறியாளர் ஜெகலோத், முதன்மை திட்ட மேலாளர் நஜீர் அகமது உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement