ஆபத்தான சாலை வளைவுகளில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்

உத்திரமேரூர், மார்ச் 23--
உத்திரமேரூர் ஒன்றியம், கிளக்காடி கிராமத்தில் இருந்து, எஸ்.மாம்பாக்கம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி, அப்பகுதியைச் சேர்ந்தோர் சாலவாக்கம், மதுராந்தகம், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.
சேதமடைந்து இருந்த இச்சாலை, ஒரு மாதத்திற்கு முன், 2024 --- 25ம் நிதி ஆண்டு, பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ், 1.80 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த சாலையில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆபத்தான சாலை வளைவுகள் உள்ளன. இந்த சாலை வளைவுகளில் போதிய வேகத்தடை மற்றும் போக்குவரத்து எச்சரிக்கை பதாகைகள் இல்லாமல் உள்ளன.
இதனால், இரவு நேரங்களில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், சாலை வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, கிளக்காடி -- எஸ்.மாம்பாக்கம் சாலையில் உள்ள, ஆபத்தான வளைவுகளில் வேகத்தடை அமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.