அடமான நகையை மீட்க வாங்கிய ரூ.12 லட்சத்தை ஏமாற்றிய பெண்கள் கிருமாம்பாக்கம் போலீசார் விசாரணை

பாகூர் : வங்கியில் அடமானத்தில் உள்ள நகைகளை மீட்க வாங்கிய பணத்தை திருப்பி தராமல், ரூ. 12 லட்சத்தை ஏமாற்றிய மூன்று பெண்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

புதுச்சேரி, லாஸ்பேட்டை கவிக்குயில் நகரை சேர்ந்தவர் பிரபு, 42; அடமான நகைகளை மீட்டு, மறு அடமானம் வைக்கும் தனியார் கன்சல்டன்சி ஊழியர்.

இந்நிறுவன உரிமையாளர் குமரேஷிற்கு, புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்த சந்திரலேகா என்பவர், மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தனக்கு தெரிந்தவர்களின் நகைகள், காட்டுக்குப்பத்தில் உள்ள வங்கியில் அடமானத்தில் உள்ளதாகவும், அதை மீட்க வேண்டும் எனக் கூறி, அடகு நகைகளின் விபரங்களை வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி உள்ளார்.

இதையடுத்து, குமரேஷ், ரூ. 12 லட்சத்தை, பிரபுவிடம் கொடுத்து கடந்த மாதம் 13ம் தேதி காட்டுக்குப்பத்தில் உள்ள வங்கிக்கு அனுப்பினார்.

அங்கு சாமுண்டீஸ்வரி, மகேஸ்வரி, நந்தினி ஆகியோரை பிரபுவிடம், சந்திரலேகா அறிமுகம் செய்து, அவர்களின் நகையை அடகில் இருந்து மீட்டு மறு அடகு வைக்க வேண்டும் என, கூறினார்.

இதையடுத்து, பிரபு கொடுத்த ரூ.12 லட்சத்தை பெற்ற மூவரும், வங்கிக்குள் சென்று, நகையை மீட்டு வெளியே வந்தனர். அவர்களிடம், பிரபு மறு அடமானம் மற்றும் தனது கமிஷன் தொகை குறித்து கேட்டார். அதற்கு மகேஸ்வரி தனக்கு மயக்கம் வருவதாக கூறினார்.

பிரபு தொடர்ந்து பணம் குறித்து கேட்டபோது, அவருக்கு மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்று விட்டனர்.

பிரபு கொடுத்த புகாரின்பேரில், சென்னை மதுரவாயல் சாமுண்டீஸ்வரி, மணப்பட்டு கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி, அவரது மகள் நந்தினி ஆகியோர் மீது கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement