இனவெறியுடன் விமர்சனம்: சர்ச்சையில் சிக்கினார் ஹர்பஜன் சிங்!

8

புதுடில்லி: கிரிக்கெட் போட்டி வர்ணனையின் போது இங்கிலாந்து வீரரை இனவெறியுடன் விமர்சித்ததாக ஹர்பஜன் சிங் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.


முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தற்போது ஆம் ஆத்மி கட்சியில் எம்.பி., ஆக உள்ளார். ஆனாலும் அவர் இன்னும் பழைய தொழிலான கிரிக்கெட்டை முற்றிலும் கைவிட்டு விடவில்லை. தற்போது நடந்து வரும் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் நேர்முக வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.

நேற்று ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. இதில் விளையாடிய இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சரை பார்த்து ஹர்பஜன் கமென்ட் ஒன்றை கூறினார். பிளாக் டாக்ஸி என்ற அவரது அந்த கமென்ட், சமூக வலைதளத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


லண்டனில் இயக்கப்படும் கருப்பு நிற டாக்ஸிகளின் மீட்டர்களைப் போல, ஜோப்ரா ஆர்ச்சரின் மீட்டர்களும் உயர்ந்த நிலையிலேயே இருக்கின்றன என்பது ஹர்பஜனின் கமென்ட்.ரசிகர்கள் பலரும், ஹர்பஜன் சிங்கின் இந்த கருத்து, மிக மோசமானது என்று விமர்சித்தனர். சம்பந்தப்பட்ட இங்கிலாந்து வீரரிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஹர்பஜன் சிங் கிரிக்கெட் விளையாடிய காலத்தில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வீரர்கள் அவருடன் இனவெறியுடன் மோசமாக நடந்து கொண்டதாக புகார்கள் எழுந்தன.


அப்போது ஹர்பஜனுக்கு ஆதரவாக ரசிகர்கள் குரல் கொடுத்தனர். இப்போது அதே ஹர்பஜன், இன்னொரு வீரரை பார்த்து இனவெறி சர்ச்சை ஏற்படுத்தும் வகையிலான கமென்ட் கூறியிருப்பது இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement