சிங்கப்பூர் தமிழ் நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டு

4


சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ் நடிகரும், ரேடியோ ஜாக்கியாகவும் உள்ள குணாளன், 43, மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.


தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரைச் சேர்ந்தவர் குணாளன். இந்திய வம்சாவளியான இவர், அங்குள்ள பிரபல ஊடக நிறுவனமான மீடியாகார்பின் தமிழ் ரேடியோ ஸ்டேஷனின் ஒலி எப்.எம்., ரேடியோவில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இது தவிர, சிங்கப் பூரில் வெளியான சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், குணாளன் இரண்டு பெண்களை கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஆபாசமாக வர்ணித்ததுடன், 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியிடம் சமூக வலைதளங்கள் மற்றும் மொபைல் போன் வாயிலாக, பாலியல் ரீதியில் ஆபாசமாக பேசியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அறிந்த குணாளன், சமூக வலைதளங்களில் தான் பதிவிட்ட ஆபாச கருத்துகளை நீக்கியுள்ளார். எனினும், பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மீடியாகார்ப் நிறுவனம் குணாளனை நீக்கியுள்ளது.



இதற்கிடையே, குணாளன் மீதான வழக்குகள், அந்நாட்டு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, குணாளனின் வழக்கறிஞர் ஆஜரானார். எனினும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையின் போது குணாளன் கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனக்கூறி, வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 21க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Advertisement