ஆன்லைன் சூதாட்டத்தால் 84 பேர் தற்கொலை; அரசு கணக்கு தவறு என ராமதாஸ் புகார்

3


சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதா? இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ளனர் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


அவரது அறிக்கை: தமிழகத்தில் 2019ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து 47 பேர் மட்டும் தான் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. 2019ம் ஆண்டில் தொடங்கி இன்று வரை குறைந்தது 84 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட பாதியாகக் குறைத்துக் காட்ட தமிழக அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் 2014ம் ஆண்டிலேயே ஆன்லைன் சூதாட்டம் நுழையத் தொடங்கியது. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் முதல் தற்கொலை கடந்த 2016ம் ஆண்டில் நிகழ்ந்தது. அப்போதிலிருந்தே ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன்.



2019, 2020 ஆகிய ஆண்டுகளில் 10 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டனர். அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என்று 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அன்று தொடங்கி 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் நாள் புதிய ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் இயற்றப்படும் வரை 29 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.


அந்த சட்டத்தை கவர்னர் திரும்பி அனுப்பியதைத் தொடர்ந்து அதே சட்டம் 2023ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி மீண்டும் இயற்றப்பட்ட போது, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்திருந்தது. அந்த சட்டத்திற்கு அதே ஆண்டின் ஏப்ரல் 10ம் தேதி கவர்னர் ஒப்புதல் அளித்த போது 50 பேர் தற்கொலை செய்து கொண்டிருந்தனர்.


திமுக ஆட்சியில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என 2023ம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு இதுவரை 24 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் இதுவரை 3 காலக் கட்டங்களில் 84 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலையில், தவறான தகவல்களை அரசு அளிப்பதை ஏற்க முடியாது.


இந்த விவகாரத்தில் தவறான தகவல்களை தெரிவிப்பதை விடுத்து, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement