ஊராட்சிக்கு வழங்காமல் வீணாகும் வாகனங்கள்

கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் ஊராட்சிகளுக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கப்படாமல், அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் வீணாகி வருகிறது.

கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் 27 ஊராட்சிகள் உள்ளன. இங்கு குப்பையை அகற்ற துாய்மை பாரத திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் வழங்கப்பட உள்ளது.

தலா ரூ. 2.80 லட்சம் மதிப்பிலான இவ்வாகனங்கள் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்துள்ளன. வாகனங்களுக்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் மூலம் பதிவெண்ணும் வழங்கப்பட்டு விட்டது. அவற்றை ஊராட்சிகளுக்கு வழங்காமல் பலவாரங்களாக ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் திறந்த வெளியில் நிறுத்தப்பட்டுள்ளன.

வெயில், மழையில் நனைந்து வரும் வாகனங்கள் மீது புழுதி படிகிறது. மக்கள் வரிப்பணம் வீணாவதால் அதிகாரிகள் அவற்றை உடனே ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டும். அதன் மூலம் ஊராட்சிகளில் துாய்மை, சுகாதார பணிகள் துரிதமாக நடைபெறும். எனவே தாமதமின்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

பி.டி.ஓ., சங்கர் கைலாசம் கூறுகையில், ''பேட்டரி வாகனங்களை ஆய்வு செய்த அரசு அதிகாரிகளின் அறிக்கை வர வேண்டியுள்ளது. அத்துடன் ஊராட்சி சார்பில் 30 சதவீதம் நிதி வழங்கியதும் வண்டிகள் அந்தந்த ஊராட்சியிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.

Advertisement