கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கு பெங்களூரு வாலிபர் கைது

புதுச்சேரி : கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த பெங்களூரு வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில், லோன் ஆப் மூலம் பணம் வழங்கி, மேலும் அதிக பணம் கட்ட வேண்டும் என, மர்ம கும்பல் பொது மக்களை மிரட்டி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வெளி நாடுகளில் பணம் பரிவர்த்தனை தொடர்பாக, மர்ம கும்பலிடம் ஏமாந்த, புதுச்சேரியை சேர்ந்த ஒருவர், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக, சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து, கிரிப்டோ கரன்சி மோசடி செய்யும் கும்பலை சேர்ந்த, செரிப், சவி ஆகிய இரண்டு பேரை, கேரளாவில், கடந்த ஒரு மாதத்திற்கு முன், சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தேடப்படும் மோசடி கும்பல், பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. அவர்களை பிடிக்க, புதுச்சேரி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, தியாகராஜன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த வழக்கில், தலைமறைவாக இருந்த பெங்களூரு, பலானாஹல்லி பகுதியை சேர்ந்த புனித், 24, என்பவரை, நேற்று முன்தினம், போலீசார் பிடித்து வந்து, விசாரித்தனர். அவரை நேற்று கைது செய்து, கோர்ட்டில், ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Advertisement