திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம்

தேனி : தேனி அரண்மனைப்புதுாரில் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி முடிக்கப்பட்டு இரு மாதங்களுக்கு மேலாக பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.

மாவட்டத்தில் 41 ஆரம்ப சுகாதார நிலையங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவை ஊரக பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உதவியாக உள்ளன. அரண்மனைப்புதுார் ஊராட்சிக்குட்பட்டு முல்லை நகர் அரசு அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பில் கடந்தாண்டு புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணி துவங்கியது.

இரு மாதங்களுக்கு முன் பணிகள் முடிவடைந்தன. ஆனால், இதுவரை இந்த சுகாதார நிலையம் பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்த நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால் முல்லை நகர், சத்திரப்பட்டி, அரண்மனைப்புதுார் பகுதி பொதுமக்கள் பயனடைவர்.

இது பற்றி சுகாதாரத்துறை அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்த சுகாதார நிலையத்திற்கு இதுவரை மருந்துகள், மருத்துவர்கள் ஒதுக்கீடு செய்யவில்லை. அமைச்சர் திறந்து வைப்பதற்காக காத்திருக்கிறோம். விரைவில் பயன்பாட்டிற்கு வரும்,' என்றார்.

Advertisement