ரேஷன் கடை கட்டுமான பணி மாற்று இடம் தேர்வு செய்ய கோரிக்கை
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டுமான பணியை மாற்று இடத்தில் துவங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்கராபுரம் பேருராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
13 வது வார்டில் வசிக்கும் மக்கள், ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க1 கி.மீ., துாரத்தில் உள்ள தியாகராஜபுரம் சாலை ரேஷன் கடைக்கு செல்கின்றனர். இதனால் முதியவர்கள் கடும் சிரமப்படுகின்றனர்.
இதனால், அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, உதயசூரியன் எம்.எல்.ஏ., அங்கு புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 10 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.கள்ளக்குறிச்சி சாலையில், மத்திய கூட்டுறவு வங்கி அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டு கடந்த இரு ஆண்டுக்கு முன் கட்டுமான பணிகள் துவங்கியது. தனி நபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், கட்டுமான பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து, 8 வது வார்டு மற்றும் 13 வார்டு மக்கள் கிடப்பில் உள்ள கட்டுமான பணியை துவங்க பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, புதிதாக மாற்று இடம் தேர்வு செய்து ரேஷன் கடை கட்டடம் கட்டுமான பணியை துவங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.