ரிஷிவந்தியம் தொகுதியில் நிலவும் அதிருப்தி நலத்திட்டங்களை அள்ளி வழங்கும் எம்.எல்.ஏ.,
ரிஷிவந்தியம் தொகுதியில் வரும் சட்டசபை தேர்தலில் வாக்காளர்களின் அதிருப்தியை குறைத்து ஓட்டுகளை அள்ள 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டப் பணிகளை தொகுதி எம்.எல்.ஏ., துரிதப்படுத்தி வருகிறார்.
ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக, கள்ளக்குறிச்சி தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளரான வசந்தம் கார்த்திகேயன் உள்ளார். தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்ற இவர், 3வது முறையும் களம் காண கணக்கு போட்டு வருகிறார். அமைச்சர் வேலுவிடம், இவருக்கு உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி மாவட்டத்தில் ஏக போக செல்வாக்குடன் வலம் வருகிறார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 41,728 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இவர், கடந்த லோக்சபா தேர்தலில் இத்தொகுதியில் 11,120 ஓட்டுக்களை மட்டுமே அ.தி.மு.க.,வை விட கூடுதலாக பெற முடிந்தது.
லோக்சபா தேர்தலில் சில ஊர்களில் தி.மு.க., வேட்பாளர் மலையரசனை பிரசாரம் செய்யவே உள்ளே விடவில்லை. இதற்கு வசந்தம் கார்த்திகேயன் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியே காரணம் என கூறப்பட்டது. இதே நிலை நீடித்தால் வரும் சட்டசபை தேர்தலில் இங்கு மீண்டும் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த அவர், அதற்கான அஸ்திரத்தை கையில் எடுத்து செயல்பட்டு வருகிறார்.
மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த தொகுதியில், அமைச்சர் வேலுவின் ஆதரவுடன் சாலை கட்டமைப்பை மிக வேகமாக மேம்படுத்தி வருகிறார். பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை, அமைச்சர் வேலு கைகளில் உள்ளதால் அதிலிருந்து பல திட்ட பணிகளை கேட்டு பெற்று செயல்படுத்துவதற்கு முனைப்பு காட்டி வருகிறார். குறிப்பாக கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை இடையே நான்கு வழி சாலை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. அதேபோல் தியாகதுருகம் வழியே அடரி - திருவண்ணாமலை சாலை நான்கு வழி சாலையாக மேம்படுத்தப்படுகிறது.
தொகுதியில் உள்ள ஆறுகளில் மேம்பாலம் மற்றும் தடுப்பணைகள் கட்டும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. பழமையான கோவில்கள் திருப்பணி வேலைகளை முடித்து தேர்தலுக்கு முன் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்படி திரும்பிய பக்கமெல்லாம் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் தொகுதி முழுதும் நடந்து வருகிறது.
இது மட்டுமின்றி தொகுதியில் உள்ள கட்சியினருக்கும், வசந்தம் கார்த்திகேயன் தாராளம் காட்டி வருகிறார். கட்சியினரின் வீட்டு விசேஷம் மற்றும் துக்க நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொள்கிறார்.
குறிப்பாக அதிருப்தி அதிகம் உள்ள ஊர்களில் கூடுதலாக திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறார்.
எப்படியும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் இதே தொகுதியில் சீட் பெற்று விட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வரும் வசந்தம் கார்த்திகேயன் அதற்குள் தொகுதியில் உள்ள அதிருப்திகளை சரிகட்ட வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார். தேர்தலை குறிவைத்து இத்தொகுதியில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் தி.மு.க., வுக்கு ஆதரவு அலையாக மாறுமா என்பது வாக்காளர்கள் கையில் தான் உள்ளது.