டில்லிக்கு வந்தது ஏன் :இ.பி.எஸ்., பேட்டி

28

சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க., பொதுச் செயலாளருமான இ.பி.எஸ்.,திடீரென டில்லி சென்றிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. டில்லியில் கட்டப்பட்டு உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை பார்க்க வந்ததாக அவர் விளக்கம் அளித்து உள்ளார்.


@1brவரும் 2026ம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது. ஓராண்டு உள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் எந்த கட்சிகள் யாருடன் கூட்டணி என்பது பற்றிய கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
ஆளும்கட்சியான தி.மு.க., தற்போதுள்ள கூட்டணியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பேச்சுகள் தொடரும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., என்ன செய்ய உள்ளது என்பதும் தான் அனைவரின் கேள்வியாக உள்ளது.


மீண்டும் பா.ஜ.,வுடன் கூட்டணி உருவாகும் என்று இந்த நிமிடம் வரை பேச்சுகள் விடாமல் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இப்படியான சூழலில், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., இன்று (மார்ச் 25) திடீரென டில்லிக்கு பயணமாகி உள்ளார்.


தலைநகர் டில்லியில் அ.தி.மு.க., கட்சி அலுவலகம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள இந்த கட்டடத்தை இ.பி.எஸ்., சென்னையில் இருந்து காணொலி வாயிலாக தான் திறந்து வைத்தார்.

அந்த அலுவலகத்தை பார்வையிடுவது, கூடவே, டில்லியில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து கலந்துரையாடுவது, தேர்தல் ஆணையத்தில் இருக்கும் வழக்கு விவகாரம் தொடர்பாக, மூத்த வழக்கறிஞர்களுடன் விவாதிப்பது ஆகியவை அவரது பயணத்திட்டத்தின் நோக்கம் என்று கட்சியினர் கூறுகின்றனர்.

மும்மொழிக் கொள்கை, தொகுதி மறு சீரமைப்பு விவகாரம் ஆகியவை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி டில்லியில் பா.ஜ., மூத்த தலைவர்களிடம் விளக்கவும், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை புகார் கூறவும் இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொள்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இ.பி.எஸ். டில்லி சென்றுள்ள அதே தருணத்தில் இன்று (மார்ச் 25) மாலை எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் டில்லி செல்ல உள்ளதாக தெரிகிறது. இவ்விரண்டு விஷயங்களை ஒருங்கே வைத்து பார்க்கும் அரசியல் நோக்கர்கள், இது நிச்சயம் கூட்டணி பேச்சு வார்த்தைக்கான முதல்கட்ட நகர்வே என்கின்றனர்.

முதல்வரை முந்திக்கொள்ள முயற்சியா?

சட்டசபையில் நேற்று 24ம் தேதி பேசிய முதல்வர் ஸ்டாலின், 'தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டு நடவடிக்கைக்குழு தீர்மானத்தை பிரதமர் மோடியிடம் நேரில் வழங்கி, அவரிடம் பேச இருப்பதாக' அறிவித்தார்.
அவர் சென்று நேரில் பார்ப்பதற்கு முன், நாம் பா.ஜ., தலைவர்களை சந்தித்துப் பேசி நிலைமையின் தீவிரத்தை விளக்கி, நல்ல அறிவிப்பு வெளியிடச் செய்யும் முயற்சியாக, இ.பி.எஸ்., சென்றிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


தற்போது எழுந்துள்ள யூகங்கள் தொடர்பாக இ.பி.எஸ்., கூறியதாவது: டில்லியில் கட்டப்பட்ட அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை பார்வையிட வந்தேன் என்றார்.

Advertisement