நிமோனியாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் போப் பிரான்சிஸ்

ரோம் : நிமோனியாவில் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தீவிர சிகிச்சையில் இருந்த போப் பிரான்சிஸ் குணமடைந்து நேற்று வீடு திரும்பினார்.
உலகம் முழுதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவராக கருதப்படுபவர் போப் ஆண்டவர் என அழைக்கப்படும் போப் பிரான்சிஸ், 88; ஐரோப்பிய நாடான இத்தாலியின் ரோமில் உள்ள வாடிகன் நகரில் வசித்து வருகிறார்.
அவருக்கு வயது மூப்பு காரணமாக பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த பிப்., 14ம் தேதி அவரின் உடல்நிலை மோசமடைந்து, ரோம் நகரில் உள்ள ஜெமிலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் மூச்சு விடுவதில் சிரமத்தை அனுபவித்தார். அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது. பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டன. இதில் உடல்நலம் தேறிய அவர், 38 நாட்களுக்கு பின் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த தகவல் அறிந்த நுாற்றுக்கணக்கான மக்கள் போப்பை பார்க்க மருத்துவமனை முன் திரண்டனர். சக்கர நாற்காலியில் வெளியே வந்த போப், கூட்டத்தினரை பார்த்து கையசைத்துவிட்டு வாடிகனில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டார்.
போப் டிஸ்சார்ஜ் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், 'அவர் உடல்நலம் தேறி இருந்தாலும் இரண்டு மாதங்கள் முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டும். பார்வையாளர்களை சந்திக்கக் கூடாது' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement