தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கொடுக்க மாட்டோம்: அண்ணாமலை

12

திருச்சி : ''தமிழகத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், தனியார் பள்ளிகளுக்கு அனுமதியே கொடுக்க மாட்டோம்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.

தமிழக பா.ஜ., சார்பில், தேசிய கல்விக் கொள்கையை விளக்கும் வகையில், திருச்சியில் முதல் மண்டல பொதுக்கூட்டம் நடந்தது.

அதில், பங்கேற்று அண்ணாமலை பேசியதாவது: மோடி பிரதமரானவுடன், மாணவர்கள் முன்னேற்றம் சார்ந்த கல்விக் கொள்கையை வடிவமைக்க கமிட்டி அமைத்தார். கடந்த 2019 மே 31ல், கல்வியாளர் கஸ்துாரி ரங்கன், புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை தயாரித்துக் கொடுத்தார்.

கையெழுத்து இயக்கம்



ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியில் தான் படிக்க வேண்டும் என்பது தேசிய கல்விக் கொள்கையின் முதல் அம்சம். 6, 7, 8ம் வகுப்புகளும் தமிழ் மொழியில் சொல்லிக் கொடுப்பதற்கான முயற்சி எடுப்போம் என்பது இரண்டாவது அம்சம்.

இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தும், தி.மு.க.,வினரால் கட்டாய தமிழ் மொழி கல்வியை கொண்டு வரமுடியவில்லை. ஆனால், தமிழர்கள் தமிழ் மொழியை படித்தாக வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்த முயன்றுள்ளார் மோடி.

புதிய கல்விக் கொள்கையில், மூன்றாவது அம்சமாக கட்டாயம் ஹிந்தி படிக்க வேண்டும் என்று இருந்தது. அதை மாற்றி, ஏதேனும் ஒரு இந்திய மொழியை படிக்க வேண்டும் என்று கொண்டு வந்தவர் மோடி.

மார்ச் 5ல், தேசிய கல்விக் கொள்கையை வலியுறுத்தி மக்களிடம் கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது.

கடந்த 18 நாட்களில், 26 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். தி.மு.க.,வினருக்கு கல்வியின் சக்தி தெரியவில்லை.

மக்கள் பணத்தை கொள்ளை அடித்தோர், ரவுடிகள், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றோரெல்லாம் தமிழகத்தின் கல்விக் கொள்கையை வடிவமைப்பராம். அதை ஏற்க முடியாது.

பா.ஜ., புரட்சி



அதனால், புதிய கல்விக் கொள்கை பற்றி மக்களுக்கு விளக்குவதை பா.ஜ., புரட்சியாக செய்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், தனியார் பள்ளியிலும், அரசு பள்ளியிலும் சம கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். தனியார் பள்ளிகள் புதிதாக துவங்க அனுமதிக்க மாட்டோம். அரசு பள்ளிகளை மேம்படுத்தி, பி.எம். ஸ்ரீ பள்ளிகளாக மாற்றுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement