சுண்ணாம்பு கலந்த குடிநீர் வினியோகத்தால் சிறுநீரகம் பாதிப்பு: குடிநீர் திட்டங்களிலே முழுமையான சப்ளை எதிர்பார்ப்பு

மாவட்டத்தில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அந்தந்த கிராமம் அல்லது அருகில் உள்ள பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து, குழாய்கள் பதித்து குடிநீர் சப்ளை செய்கின்றனர். நல்ல மழை பெய்து நீர் நிலைகளில் தண்ணீர் இருந்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீரின் சுவை மாறாமல் இருக்கும்.

மழைப்பொழிவு குறைந்து நீர் நிலைகளில் தண்ணீர் இன்றி நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் போது, தண்ணீரின் சுவை மாறி உவர்ப்பு தன்மையாகவும், சில இடங்களில் சுண்ணாம்பு சத்து கலந்த தண்ணீராகவும் இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பலருக்கு சிறுநீரகம் பாதித்து, உடல் உபாதை ஏற்படுகிறது.

குறிப்பாக காரியாபட்டி பகுதியில் முடுக்கன்குளம், அ.முக்குளம், சொக்கனேந்தல், தேனுார், அ.தொட்டியங்குளம், நரிக்குடி கல்விமடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு சிறு வயதிலேயே பலர் இறந்தனர். எதனால் ஏற்படுகிறது என்பது தெரியாமலே தொடர்ந்து பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பல இடங்களில் குடிநீரை ஆய்வு செய்த போது, சுண்ணாம்பு சத்து கலந்திருப்பது கண்டறியப்பட்டது. அது போன்ற குடிநீரை தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிய வந்தது. உள்ளூரில் ஆழ்துளை அமைத்து சப்ளை செய்யப்படும் தண்ணீரில் இப்பிரச்னை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதில் தாமிரபரணி குடிநீர் திட்டத்தின் மூலம் பெரும்பாலான கிராமங்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வந்தாலும், முறையாக சப்ளை செய்வது இல்லை. அப்படியே இருந்தாலும் உள்ளூர் தண்ணீருடன் கலந்து சப்ளை செய்கின்றனர். பாதிப்பில் இருந்து மக்கள் மீள முடியாமல் தவிக்கின்றனர்.

தாமிரபரணி, வைகை கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Advertisement