பத்தாம் வகுப்பு வினாத்தாள் மையத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

நாமக்கல்: தமிழகம் முழுவதும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, வரும், 28ல் தொடங்கி, ஏப்., 15ல் முடிகிறது. நாமக்கல் மாவட்டத்தில், இந்தாண்டு, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என, மொத்தம், 210 பள்ளிகளை சேர்ந்த, 10,005 மாணவர்கள், 9,033 மாணவியர், 304 தனித்தேர்வர்கள் என மொத்தம், 19,342 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இதற்காக, மாவட்டத்தில் மொத்தம், 92 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேர்விற்கான முன் ஏற்பாடு பணிகளை கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்விற்கான வினாத்தாள், கன்டெய்னர் லாரி மூலம், நேற்று நாமக்கல் கொண்டு வரப்பட்டது. இங்குள்ள, மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து வினாத்தாள் அடங்கிய பண்டல்கள், மாவட்டத்தில் உள்ள, மூன்று மையங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

தொடர்ந்து, அங்கு தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு அறை பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டது. வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறை முன், 24 மணி நேரமும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு என, மூன்று மையங்களில் வினாத்தாள் வைக்கப்பட்டுள்ளன. தேர்வின் போது குறித்த நேரத்தில் அனைத்து மையங்களுக்கும் வினாத்தாள் அலுவலர் மூலம், வாகனங்களில் எடுத்துச்செல்லும் வகையில், மூன்று மையங்களில் வினாத்தாள் பிரித்து வைக்கப்பட்டுள்ளன.

Advertisement