செய்திகள் சில வரிகளில்..

ஆட்டோ டிரைவர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்



ஈரோடு: ஈரோடு மாவட்ட மாநகர ஆட்டோ தொ.மு.ச., உறுப்பினர்களுக்கு, உறுப்பினர் அட்டையை வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி நேற்று வழங்கினார். எம்.எல்.ஏ., சந்திரகுமார், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட தொ.மு.ச., பேரவை நிர்வாகிகள் கோபால், ராமச்சந்திரன், தங்கமுத்து, தொ.மு.ச மாவட்ட நிர்வாகிகள் மனோகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மனைவி மாயத்தால் கணவர் தற்கொலை



பவானி: பவானியை அடுத்த சூரியம்பாளையத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரன், 36; டிரைவர். மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் மனைவி இல்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மனமுடைந்த நிலையில் வீட்டுக்கு சென்றவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்தோடு போலீசார் உடலை கைப்பற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காங்கேயம் அருகே நாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் பலி



காங்கேயம்: காங்கேயம் அடுத்த சர்க்கார் கத்தாங்கண்ணி கிராமத்தில், பாப்பம்பாளையம் கதிரேசன், தனது தோட்டத்தில் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் தோட்டத்தில் புகுந்த தெருநாய்கள் சரமாரியாக கடித்ததில், ஆறு ஆடுகள் பலியாகின. ஐந்து குட்டிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதேபோல் பச்சாபாளையம் கிராமம் சுக்குட்டிபாளையத்தில் தினேஷ் என்பவர் தோட்டத்தில் புகுந்து தெருநாய்கள் கடித்ததில் இரு ஆட்டுக் குட்டிகள் இறந்தன.

முருங்கை 22 டன் வரத்து



காங்கேயம்: வெள்ளகோவில் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு, 22 டன் முருங்கை நேற்று வரத்தானது. ஒரு கிலோ, 3 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்து அதிகரித்ததால் விலை குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். விலை மிகவும் குறைந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

Advertisement