தேனி மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்- அபாயம் ; பெரியாறு அணை நீர்மட்டம் 113 அடியாக குறைந்தது

கூடலுார்: முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 113 அடியாக குறைந்துள்ளதால் தேனி மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. ஆற்றில் தண்ணீர் மிகக் குறைவாக செல்வதால் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி113 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). அணையில் 108 அடிக்கு மேல் உள்ள தண்ணீரை மட்டுமே தமிழகப் பகுதிக்கு பயன்படுத்த முடியும். ஐந்து அடி நீர்மட்டமே பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ளதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

நீர்மட்டம் குறைந்துள்ளதால் தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 300 கன அடியிலிருந்து 278 ஆக குறைக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 186 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 1392 மில்லியன் கன அடியாகும். நீர்ப்பிடிப்பில் மழையின்றி வறண்ட நிலை காணப்படுகிறது.

வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் குறையும் வாய்ப்புள்ளது.

தற்போது அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள 278 கன அடி நீரானது லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்ட பகுதிக்கு 100 கன அடியும், மதுரை குடிநீருக்கு 100 கன அடியும் எடுத்தது போக மீதமுள்ள 78 கன அடி மட்டுமே முல்லைப் பெரியாற்றில் ஓடுகிறது.

கரையோர பகுதியில் அமைந்துள்ள கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஆற்றில் நேரடியாக பம்பிங் செய்து குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது குறைவாக ஓடும் தண்ணீரில் பம்பிங் செய்ய முடியாமல் ஊராட்சி நிர்வாகங்கள் திணறி வருகிறது. லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கூடலுார், கம்பம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்குமுழுமையாக குடிநீர் சப்ளை செய்ய முடிவதில்லை.

லோயர்கேம்ப் பம்பிங் ஸ்டேஷனில் அடிக்கடி பம்பிங் மோட்டார் பழுது ஏற்படுவதால் மேலும் சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது.

கோடை மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே குடிநீர் பற்றாக்குறையை போக்க முடியும்.

அதனால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும்



நீலகண்டன், ஓய்வுபெற்ற பஸ் கண்டக்டர், கூடலுார்: தற்போது அணையில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் முல்லைப் பெரியாற்றில் மிகக் குறைந்தளவு தண்ணீர் செல்கிறது. இதனால் கிராம மக்கள் குடிநீருக்கு சிரமம் ஏற்படுவது மட்டுமின்றி, கால்நடைகளுக்கும் தண்ணீர் கிடைக்காமல் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ஆற்று நீரை திருடி விவசாயத்திற்கு பயன்படுத்துவதை தடுக்கவும், தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

Advertisement