செந்தில் பாலாஜியின் பதவியை நீக்க வேண்டும்: முதல்வருக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

6

சென்னை: ஜாமின் பெறுவதற்காக, பொய்சொல்லி சுப்ரீம் கோர்ட்டை ஏமாற்றிய செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

அண்ணாமலை அறிக்கை:

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த சாராய அமைச்சர், சிறையில் ஜாமின் கிடைப்பதற்காக, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து நாடகமாடி, ஜாமினில் வெளிவந்ததும், உடனடியாக அமைச்சர் பதவியேற்றதை, சுப்ரீம் கோர்ட் கண்டித்ததோடு, அதற்கு விளக்கம் கொடுக்குமாறும் சாராய அமைச்சருக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்தும், சாராய அமைச்சர் இன்னும் விளக்கம் கொடுக்காமல் இருப்பதை, இன்று சுப்ரீம் கோர்ட் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இதே சாராய அமைச்சர் மீது கூறிய குற்றச்சாட்டுக்களை வசதியாக மறந்து, வெட்கமே இல்லாமல் இன்று தனது அமைச்சரவையில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஜாமின் கிடைப்பதற்காகப் பொய் சொல்லி, சுப்ரீம் கோர்ட்டையே ஏமாற்றியுள்ள சாராய அமைச்சர், அமைச்சர் பதவியில் தொடர எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. உடனடியாக, அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement