தொகுப்பூதிய ஆசிரியர்கள் பணி நிரந்தரம் அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரி: சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம்:

ஆறுமுகம் (என்.ஆர்.காங்.,): கடந்த 2015ம் ஆண்டு தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிரந்தர பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 2021ம் ஆண்டில் தான் அவர்கள் கவுரவ பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களாக, அதாவது கெஸ்ட் டி.ஜி.டி., தமிழ் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.

அதன் அடிப்படையில் 66 கவுரவ தமிழ் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், 18 கவுரவ ஆங்கில பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் என மொத்தம் 84 ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

அமைச்சர் நமச்சிவாயம்: விதிகள், அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டு பரிசீலிக்கப்படும். கடந்த ஆட்சியில் நிதியை கருத்தில் கொண்டு, ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 288 ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர். இவர்களை பணிநிரந்தரம் செய்வது குறித்து முதல்வர், தலைமை செயலருடன் பேசியுள்ளோம். தலைமை செயலர், இவர்கள் கொல்லைப்புறம் வழியாக வந்தவர்களா என கேள்வி எழுப்பினர்.

அவரிடம், இவர்கள் கொல்லைப்புறமாக நியமிக்கப்படவில்லை. நேர்காணல் மூலம் தேர்வானவர்கள் என தலைமை செயலரிடம் விளக்கியுள்ளோம். அவரும் சாதகமான முடிவு எடுக்கலாம் என கூறியுள்ளார். அவர்கள் பணி நிரந்தரம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

Advertisement