போக்சோ வழக்கில் இரு வாலிபர்கள்  கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் போக்சோ வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கஞ்சா கும்பலை கைது செய்தனர்.

இந்த கும்பலில் இருந்த அரவிந்த், 18; என்பவரது மொபைல் போனை சோதனை செய்தனர். அதில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ஒரு வீடியோவில் பிளஸ் 2 பயிலும் 17 வயது சிறுமியுடன் தனிமையில் இருக்கும் வீடியோ இருந்தது. போலீஸ் விசாரணையில், கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட அரவிந்த், புதுச்சேரி சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.

பெற்றோர் இல்லாத சமயத்தில் சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அதனை வீடியோவாக எடுத்து, சிறுமியை மீண்டும் மீண்டும் அழைத்து பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார்.

இந்த தகவலை போலீசார் சிறுமியின் பெற்றோருக்கு தெரிவித்தனர். பெற்றோர் புகாரின் அடிப்படையில் முத்தியால் பேட்டை போலீசார் அரவிந்த் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இதேபோல், காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சுனில் 20, இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் கோச்சிங் சென்டரில் படித்து வந்தார். அப்போது அவருக்கு 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சுனிலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement