பெண்ணின் சேலையை இழுத்து ரகளை செய்த நால்வருக்கு சிறை

கோவை; கணவருடன் நடந்து சென்ற பெண்ணின், சேலையை பிடித்து இழுத்து, ரகளையில் ஈடுபட்ட நான்கு பேரை, போலீசார் சிறையில் அடைத்தனர்.

கோவை, வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர், ராஜா 44. நேற்று முன்தினம் வீட்டருகே தனது மனைவி, மகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நான்கு பேர், ராஜா குடும்பத்தினரை கேலி, கிண்டல் செய்தனர்.

இதை தட்டிக்கேட்டதால், அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நான்கு பேரும், தகாத வார்த்தைகளால் பேசி அவரை தாக்கினர். தடுக்க முயன்ற அவரது மனைவியின் சேலையை பிடித்து இழுத்து, ரகளையில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை மிரட்டி தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில், சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணையில், முன்விரோதத்தில் இத்தாக்குதல் நடந்தது தெரிந்தது. பெண்ணின் சேலையை பிடித்து இழுத்து ரகளை செய்தவர்கள், வேலாண்டிபாளையத்தை சேர்ந்த மணி, 30, பிரிதிவிராஜ், 20, விஜயகுமார், 37, இடையர்பாளையம் ஜே.ஜே., நகரை சேர்ந்த கருணேஷ் வரன், 27, ஆகியோர் எனத் தெரிந்தது.

நான்கு பேர் மீதும், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தாக்குதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.

Advertisement