மாநகராட்சி ஏலதாரருக்கு ரூ.5,000 அபராதம் விதிப்பு
கோவை; காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் இரு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில், கூடுதல் கட்டணம் வசூலித்ததால், ஏலதாரருக்கு, 5,000 ரூபாய் மாநகராட்சி அபராதம் விதித்தது.
கோவை காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்டில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில், இரு சக்கர வாகனம் நிறுத்தினால், இரண்டு மணி நேரத்துக்கு, 10 ரூபாய், கூடுதல் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் தலா, 5 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நாளொன்றுக்கு, 60 ரூபாய் கட்டணம் விதிக்கப்படுகிறது. இதில், நாட்கள் கணக்கிடுவதில் முறைகேடு செய்து கூடுதல் கட்டணம் கறாராக பெறப்படுகிறது. இதுதொடர்பாக, நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். கட்டண விபரங்கள் தொடர்பான அறிவிப்பு பலகை இல்லாமல் இருந்தது; ஓரிடத்தில் கிழிக்கப்பட்டிருந்தது.
கட்டண பலகை வைக்க அறிவுறுத்திய மாநகராட்சி அதிகாரிகள், வாகன ஓட்டிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட ஏலதாரருக்கு, ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.