முத்தால பரமேஸ்வரி கோயிலில் ஏப்.3ல் பங்குனி கொடியேற்றம்; இன்று பூச்சொரிதல் விழா

பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி விழா ஏப்.,3ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இன்று பூச்சொரிதல் விழா நடக்கிறது.

கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா விமரிசையாக நடக்கிறது. இதன் தொடக்கமாக இன்று நகரில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் பூத்தட்டுகளை வைத்து அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடக்கிறது.

ஏப்.,2 இரவு காப்பு கட்டப்பட்டு, மறுநாள் காலை கொடியேற்றம், இரவு பூதகி வாகனத்தில் அம்மன் வீதி உலா வருகிறார். தொடர்ந்து ஏப்.,6ல் வண்டி மாகாளி உற்ஸவம், வெள்ளி சிங்கம், அன்னம், ரிஷபம், யானை, கிளி, காமதேனு வாகனங்களில் வீதி உலா வருகிறார். 8ம் நாள் இரவு குதிரை வாகனத்தில் ராஜாங்க திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

ஏப்.,11 காலை துவங்கி அக்னிச் சட்டி ஏந்திய பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். இரவு 8:10 மணிக்கு அம்மன் சர்வ அலங்காரத்துடன் மின் தீப அலங்கார தேரில் நான்கு மாட வீதிகளில் உலா வருகிறார்.

மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு பூப் பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் அம்பாள் வைகை ஆற்றில் எழுந்தருள்வார். ஏப்.,12 இரவு கொடி இறக்கப்பட்டு, ஏப்.,13 அதிகாலை 4:00 மணி முதல் பல ஆயிரம் பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால் குடங்களை சுமந்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.

அன்று காலை 11:00 மணிக்கு பாலாபிஷேகம், இரவு பூ பல்லக்கில் சயன கோலத்தில் அம்பாள் வீதி உலா வருவார். ஏற்பாடுகளை மீனாட்சி சுந்தரேஸ்வரர், முத்தாலம்மன் கோயில் தேவஸ்தான டிரஷ்டிகள், ஆயிரவைசிய சபையினர் செய்கின்றனர்.

Advertisement