புது நாயகன் அஷுதோஷின் அடுத்த அவதாரம்... * துவக்க வீரராக வருவாரா

1

விசாகப்பட்டனம்: பிரிமியர் போட்டியின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் அஷுதோஷ். 'பினிஷிங்' பணியை கச்சிதமாக முடித்த இவரை, துவக்க வீரராக களமிறக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
விசாகப்பட்டனத்தில் நடந்த பரபரப்பான பிரிமியர் லீக் போட்டியில் லக்னோ அணியை (20 ஓவர், 209/8), டில்லி (19.3 ஓவர், 211/9) அணி, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டில்லி அணி ஒரு கட்டத்தில் 113/6 ரன் (12.3 ஓவர்) எடுத்து தத்தளித்தது. இந்த சமயத்தில் 7வது இடத்தில் 'இம்பேக்ட்' வீரராக களமிறங்கிய அஷுதோஷ் சர்மா தாக்கம் ஏற்படுத்தினார். முதல் 20 பந்தில் 20 ரன் எடுத்த இவர், அடுத்த 11 பந்தில் 46 ரன் விளாசினார். கடைசி ஓவரில் இமாலய சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். 31 பந்தில் 66 ரன் (5x4, 5x6, ஸ்டிரைக் ரேட் 212.90) குவித்த இவர், ஆட்டநாயகன் விருது வென்றார்.
'குரு' ஷிகர் தவான்
அஷுதோஷ் கூறுகையில்,''கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடிய போது சில போட்டிகளை சரியாக 'பினிஷிங்' செய்ய முடியவில்லை. இதிலிருந்து பாடம் படித்தேன். வெற்றி இலக்கை எப்படி தொடுவது என சிந்தித்து கொண்டே இருந்தேன். கடைசி ஒவர் வரை நிலைத்து நின்று விளையாடினால், எதுவும் நடக்கலாம் என்ற தன்னம்பிக்கையுடன் விளாசினேன். ஆட்டநாயகன் விருதை என 'குரு' ஷிகர் தவானுக்கு அர்ப்பணிக்கிறேன். இவரை 2024ல் பஞ்சாப் அணிக்காக விளையாடிய போது, பயிற்சி முகாமில் முதன்முதலில் சந்தித்தேன். தனது 'பேட்' ஒன்றை பரிசாக அளித்தார். போட்டியின் போது நேர்மறையாக சிந்திப்பது, எப்படி திட்டமிடுவது என்பது உட்பட பல ஆலோசனை வழங்கினார். உடன் விளையாடிய விப்ராஜ் நல்ல 'கம்பெனி' கொடுத்தர். கடைசி ஓவரில் சிக்சர் அடிக்க முடியும் என நம்பினேன். வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளித்தது,''என்றார்
இந்திய அணியில்...
அஷுதோஷ் சர்மாவின் இளம் பருவ பயிற்சியாளரும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான அமய் குரேசியா கூறுகையில்,''டில்லி அணி முதல் முறையாக கோப்பை வெல்ல விரும்பினால், அஷுதோஷை துவக்க வீரராக களமிறக்க வேண்டும். 'பவர்பிளே' ஓவரில் எதிரணி பந்துவீச்சை சிதறடிப்பார். டில்லி 113/6 ரன் மட்டும் எடுத்து தவித்த நிலையில், அணியை மீட்டு வெற்றி தேடித் தந்துள்ளார். பிஷ்னோய் போன்ற சிறந்த 'ஸ்பின்னர்'களை விளாசியுள்ளார். சிறந்த பீல்டர், விக்கெட்கீப்பர், வேகப்பந்துவீச்சாளர், துவக்க பேட்டர் என பன்முக திறமை கொண்டவர். இவரை இந்திய 'டி-20' அணிக்கு தேர்வு செய்ய வேண்டும்,''என்றார்.
'சேஸ் மாஸ்டர்'
பதட்டப்படாமல் இமாலய இலக்குகளை விரட்டும் திறன் பெற்ற அஷுதோஷ், வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணிக்காக சாதிக்கலாம். கோலி வழியில் புதிய 'சேஸ் மாஸ்டர்' ஆக ஜொலிக்கலாம்.

11 பந்தில் அரைசதம்
ம.பி.,யை சேர்ந்தவர் அஷுதோஷ், 26. ராஞ்சியில் 2023ல் நடந்த சயத் முஷ்டாக் அலி தொடரில் ரயில்வேஸ் அணிக்காக விளையாடிய இவர், 'டி-20' அரங்கில் அதிவேக அரைசதம் (11 பந்து, எதிர், அருணாச்சல், ) அடித்த இந்திய வீரர் என சாதனை படைத்தார். யுவராஜ் சிங்கின் (12 பந்து, எதிர், இங்கிலாந்து, 2007, டர்பன்) 16 ஆண்டு கால சாதனையை தகர்த்தார்.
* ஐ.பி.எல்., அரங்கில் பஞ்சாப் அணி அஷுதோஷை ரூ.20 லட்சத்திற்கு 2024ல் வாங்கியது. 2025ல் இவரது மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. டில்லி அணி இவரை 3.80 கோடிக்கு வாங்கியது.

சர்ச்சையில் பயிற்சியாளர்
கோல்கட்டா அணியின் பயிற்சியாளராக இருக்கும் இந்திய முன்னாள் வீரர் சந்திரகாந்த் பண்டிட் ரொம்ப ஸ்டிரிக்ட். இவர் ராணுவத்தை போன்று கடின பயிற்சி அளிப்பதாக முன்னாள் கோல்கட்டா வீரர் டேவிட் வெய்ஸ் குற்றம்சாட்டினார். 2018ல் ம.பி., அணியின் பயிற்சியாளராக இருந்த சந்திரகாந்த், அஷுதோஷ் சர்மாவை புறக்கணித்துள்ளார். பின் ரயில்வேஸ் அணிக்கு மாறியதால், வாழ்க்கையில் வசந்தம் பிறந்துள்ளது.
இது பற்றி அஷுதோஷ் முன்பு கூறுகையில்,''பயிற்சி போட்டியில் 45 பந்தில் 90 ரன் எடுத்தேன். முஷ்டாக் அலி தொடரில் 6 போட்டியில் 3 அரைசதம் அடித்தேன். ஆனாலும் அப்போதைய ம.பி., அணி பயிற்சியாளர் ( சந்திரகாந்த் பண்டிட் ) என்னை புறக்கணித்தார். கிரிக்கெட் களத்தில் இறங்க கூட அனுமதிக்கவில்லை. தனக்கு விருப்பமானவர்களுக்கு வாய்ப்பு அளித்தார். இதனால் ஓட்டல் அறையில் முடங்கினேன். கடும் மனஅழுத்தம் ஏற்பட்டது,''என்றார். தற்போது டில்லி அணிக்காக தனிநபராக வெற்றி தேடித் தந்துள்ளார் அஷுதோஷ். இதனால் சந்திரகாந்த் பண்டிட் மீதான இவரது விமர்சனம் மீண்டும் 'வைரலாகி' உள்ளது.

மனவலிமை
ஹேமங் பதானி, டில்லி தலைமை பயிற்சியாளர்: லக்னோ போட்டிக்கு முன் அஷுதோஷ் விரலில் காயம் ஏற்பட்டது. அவரிடம் 'விளையாட முடியுமா' என கேட்டேன். அதற்கு புலியின் மனஉறுதியுடன், 'களமிறங்க தயார்' என்று சொன்னார். சிறப்பாக 'பினிஷிங்' செய்து வெற்றி தேடித் தந்தார்.
கெவின் பீட்டர்சன், டில்லி அணி ஆலோசகர்: அஷுதோஷ் களத்தில் இருக்கும் வரை போட்டியின் முடிவை கணிக்க முடியாது. லக்னோவுக்கு எதிராக மனவலிமையுடன் சிறப்பாக விளையாடினார்.

Advertisement