இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள் பறிமுதல் * ஒருவர் கைது
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
மண்டபம் வனத்துறையினர் நேற்று காலை வடக்கு கடலோர பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் ஒருவர் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பிளாஸ்டிக் கேனில் வைத்து கடத்திச் சென்றார். வனத்துறையினர் டூவீலரில் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர் மண்டபம் பகுதியைச் சேர்ந்த செய்யது மகன் தாரிக் 30, என தெரிந்தது. கேனில் 25 கிலோ கடல் அட்டைகள் உயிருடன் இருந்தது. இதனை மறைவான இடத்தில் காய வைத்து கள்ளத்தனமாக படகில் இலங்கைக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரிந்தது. அதன் மதிப்பு ரூ. 50 ஆயிரம். இதையடுத்து வனத்துறையினர் டூவீலரை பறிமுதல் செய்து தாரிக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமேஸ்வரம் நீதிமன்றம் உத்தரவுப்படி உயிருடன் இருந்த கடல் அட்டைகளை வனத்துறையினர் மீண்டும் கடலில் விட்டனர்.