வண்டலுார் -- கேளம்பாக்கம் இடையே அணுகு சாலை அமைக்க கோரிக்கை

வண்டலுார்:வண்டலுார் -- கேளம்பாக்கம் இடையிலான சாலையில், அணுகு சாலை அமைக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வண்டலுார் சந்திப்பு முதல் கேளம்பாக்கம் இடையிலான 18.6 கி.மீ., சாலையில், நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. ஒரு மணி நேரத்தில் சராசரியாக, 2,000 வாகனங்கள் இந்த வழித்தடத்தில் பயணிக்கின்றன.

தற்போது ஆறுவழிச் சாலையாக உள்ள இந்த வழித்தடத்தின் மொத்த வாகனப் போக்குவரத்தில், 60 சதவீதம் இருசக்கர வாகனங்கள், 32 சதவீதம் ஆட்டோ, கார் ஆகிய வாகனங்கள், 8 சதவீதம் கன ரக வாகனங்கள் பயணிப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

தாம்பரம் சுற்றுப் பகுதியில் வசிப்போர் வேலை, தொழில் நிமித்தமாக ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள சோழிங்கநல்லுார், துரைப்பாக்கம், சிப்காட் பூங்கா, நாவலுார் மற்றும் திருப்போரூர், மாமல்லபுரம் ஆகிய இடங்களுக்கு பயணிக்க, இந்த சாலையே பிரதான வழித்தடமாக உள்ளது.

பெருங்களத்துார் முதல் செங்கல்பட்டு வரையிலான ஜி.எஸ்.டி., சாலையின் போக்குவரத்திற்கு இணையாக, வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலையின் போக்குவரத்து உள்ளதாக தெரிவிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள், பெருகிவரும் வாகனப் போக்குவரத்திற்கு ஏற்ப, இந்த சாலையில் போதுமான வசதிகள் இல்லை என, குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, இருசக்கர வாகன ஓட்டிகள் கூறியதாவது:

வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலையை தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை கட்டமைத்து, பராமரித்து வருகிறது. சாலையின் அகலம் நேர்த்தியாக, முறையாக இல்லை. ஊனமாஞ்சேரி சந்திப்பு உள்ளிட்ட சில இடங்களில் 40 அடி அகலத்தில் சாலை உள்ளதால், 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இருசக்கர வாகன ஓட்டிகளே இந்த சாலையில் அதிகம் பயணிக்கின்றனர். பல இடங்களில் சாலை குறுகி உள்ளதாலும், சாலையின் இடது ஓரம் மோசமாக உள்ளதாலும், கட்டுப்பாடற்ற வேகத்தில் கார்கள், கனரக வாகனங்கள் பயணிப்பதாலும், விபத்து அச்சத்துடனே இருசக்கர வாகனத்தில் பயணிக்க வேண்டி உள்ளது.

எனவே, இருசக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக, விபத்து அச்சமின்றி பயணிக்க, இந்த வழித்தடத்தில் அணுகு சாலை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement