'மாப்பிள்ளைக்கு தெரியும்': அமைச்சரை சொந்தம் கொண்டாடிய அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,

சென்னை: ''தனியார் நிறுவனங்களில், 'சோலார் பேனல்' அமைக்க, 120 கே.வி., வரை அனுமதி கொடுக்க வேண்டும். இதனால், மின் வாரியத்திற்கு எந்த இழப்பும் ஏற்படாது என, மாப்பிள்ளைக்கு தெரியும்,'' என, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கருப்பணன் கோரிக்கை வைத்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - அண்ணாதுரை: டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதிகளில் மின் தட்டுப்பாடு உள்ளது. பட்டுக்கோட்டை தொகுதியில் உள்ள கருப்பூர் கிராமத்தில், தரிசு நிலம் உள்ளது. அங்கு துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். இதற்காக, கருப்பூர் ஊராட்சி மன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ராஜாமடம், ஏரிபுறக்கரை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் குறைந்த மின் அழுத்த பிரச்னை உள்ளது.
இங்குள்ள கொள்ளுக்காடு கிராமத்தில், 33 கிலோ வாட் துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. அருகில் சமையல் எரிவாயு கிடங்கு இருந்ததால், திட்டம் நிறுத்தப்பட்டு உள்ளது. அங்குள்ள அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்தில், துணை மின் நிலையம் அமைத்து தர வேண்டும்.
அமைச்சர் செந்தில் பாலாஜி: தஞ்சாவூர் மாவட்டத்தில், 16 புதிய துணை மின் நிலையம் அமைக்கவும், ஒரு துணை மின் நிலையத்தை தரம் உயர்த்தவும், அரசு அனுமதி வழங்கியுள்ளது. பட்டுகோட்டை தொகுதியில், இரண்டு துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
கருப்பூர் கிராமத்தில் புதிய துணை மின் நிலையம் அமைப்பது குறித்து, அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்யப்படும். பட்டுக்கோட்டையில் சீரான மின் வினியோகம் செய்வதற்கு 538 புதிய மின்மாற்றிங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு பொறியியல் கல்லுாரி நிலத்தை வகைமாற்றம் செய்தால், அங்கு துணை மின் நிலையம் அமைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அ.தி.மு.க., - கருப்பணன்: தனியார் நிறுவனங்களில், சூரியசக்தி மின் உற்பத்திக்கு, 'சோலார் பேனல்' நிறைய அமைக்கின்றனர். அதற்கு, 110 கிலோ வாட் மட்டும் அனுமதிக்கின்றனர். வெயில் குறைவான காலங்களில் மின்சாரம் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே, 120 கே.வி., வரை அனுமதி கொடுக்க வேண்டும்.
இதனால், மின் வாரியத்திற்கு எந்த இழப்பும் இல்லை; மாப்பிள்ளைக்கு தெரியும். சாரி... வாய் வந்துடுச்சி... பேசி பேசி வாய் வந்து விட்டது. அவருக்கு தெரியும்.
எனவே, 120 கே.வி.,யில் சோலார் பேனல் அமைக்க அனுமதி தர வேண்டும். சோலார் மின்சாரத்தை உயர்மின் அழுத்த லைனில் இணைப்பதற்கு விரைந்து அனுமதி தர வேண்டும்.
அமைச்சர் செந்தில் பாலாஜி: தனியார் சோலார் பேனல் அமைப்பது குறித்தும், இணைப்புகள் குறித்தும், எம்.எல்.ஏ., எடுத்து சொல்லியுள்ளார். மிக விரைவாக அனுமதி தர வேண்டும் என கேட்டுள்ளார். அதிகாரிகளிடம் பேசி ஆவன செய்யப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.



மேலும்
-
காத்திருந்த போலீசுக்கு 'ட்விஸ்ட்' வைத்த ரவுடி; 'பிடிவாரன்ட்' இருந்தும் பிடிக்காததால் இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்'
-
ஸ்ரீபெரும்புதுாரில் பாழாகும் குப்பை சேகரிப்பு வாகனங்கள்
-
காஞ்சியில் 32 பதவிகளுக்கு உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியல், ஓட்டுச்சாவடி பணி தீவிரம்
-
திடக்கழிவுகள் மேலாண்மைக்கு 'துாய்மை இயக்கம்' அமைப்பு; துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு
-
அமெரிக்க வரி விதிப்பு குறித்து பார்லி.,யில் விவாதிக்காதது ஏன்? கேள்வி எழுப்புகிறார் சிதம்பரம்
-
'அக்ரி ஸ்டேக்' பதிவு எங்கிருந்தும் செய்யலாம்