அரசுக்கு நிதி தட்டுப்பாடு: அமைச்சர் வெளிப்படை

சென்னை: ''நிதி நிலைமை எப்போது சரியாகிறதோ, அப்போது, அறிவித்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவோம்,'' என, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தியாகராஜன் தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - கே.பி.முனுசாமி: தற்போதைய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர், நிதி அமைச்சராக இருந்த போது, ஓசூர் மாநகரில், 'ஹைடெக் சிட்டி' அமைக்கப்படும் என்று அறிவித்தார்; ஆனால், செயல்படுத்தவில்லை.
வேப்பனஹள்ளி தொகுதியில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைக்க, அரசு முன் வர வேண்டும். சென்னை மட்டுமின்றி ஓசூர், சூலகிரியில் துணை தகவல் தொழில்நுட்ப மையங்களை உருவாக்க வேண்டும்.
அரசு கேபிள், 'டிவி' என்பது நல்ல வருவாய் வந்து கொண்டிருந்த துறை. அதன் தற்போதைய நிலை என்ன என்பதை, அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.
அமைச்சர் தியாகராஜன்: ஏற்கனவே அறிவித்த திட்டம் என்னவானது என்று கேட்கிறீர்கள். காலம் மாற, மாற, சில சூழ்நிலைகளும் மாறும். நீர்வளத்துறை அமைச்சர் என்னிடம், நிதி பெறுவது எவ்வளவு கஷ்டம் என, இப்போது தெரிகிறதா என்று ஒரு முறை கேட்டார்.
நீர்வளத்துறைக்கு அப்போது, 10,000 கோடி ரூபாய் அளவிற்கு, மானிய கோரிக்கையை அவர் தாக்கல் செய்துள்ளார். இன்றைக்கும் அதே அளவிற்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தகவல் தொழில்நுட்ப துறைக்கு அன்று, 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இன்றைக்கு, 130 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது.
அப்போது, துறைக்கு வரவேண்டிய நிதி, தடையின்றி வந்து கொண்டிருந்தது. இன்று அரசுக்கு நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதைவிட தகவல் தொழில்நுட்ப துறைக்கு அதிக நிதி தட்டுப்பாடு உள்ளது.
துறையின் நிதி, 300 கோடி ரூபாய்க்கு மேல், அரசிற்கு திரும்ப பெறப்பட்டுள்ளது. சில நிறுவனங்களுக்கு மானியம் கொடுக்க வேண்டிய நிதியும் வந்து சேரவில்லை. இது ஏற்கனவே அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடையாக உள்ளது.
எப்போது நிதி நிலைமை சரியாகிறதோ, அப்போது, அறிவித்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவோம். அரசு கேபிள், 'டிவி' நல்ல முறையில் செயல்படுகிறது. புதிதாக டெண்டர் விடப்பட்டு 'எச்.டி., பாக்ஸ்' பொருத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.










மேலும்
-
ஸ்ரீபெரும்புதுாரில் பாழாகும் குப்பை சேகரிப்பு வாகனங்கள்
-
காஞ்சியில் 32 பதவிகளுக்கு உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியல், ஓட்டுச்சாவடி பணி தீவிரம்
-
திடக்கழிவுகள் மேலாண்மைக்கு 'துாய்மை இயக்கம்' அமைப்பு; துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு
-
அமெரிக்க வரி விதிப்பு குறித்து பார்லி.,யில் விவாதிக்காதது ஏன்? கேள்வி எழுப்புகிறார் சிதம்பரம்
-
'அக்ரி ஸ்டேக்' பதிவு எங்கிருந்தும் செய்யலாம்
-
லண்டன் கல்லுாரியில் மம்தாவை 'மடக்கிய' மார்க்சிஸ்ட் மாணவர்கள்