பூச்சிமருந்து தெளிக்கும் செயல் விளக்க முகாம்
திருபுவனை : மதகடிப்பட்டு பண்ணைத் தகவல் மற்றும் ஆலோசனை மையத்தில், விவசாய நிலங்களுக்கு பூச்சிமருந்து தெளிக்கும் விவசாயிகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த செயல்விளக்க முகாம் நடந்தது.
ஆத்மா திட்டத்தின் சார்பில், பூச்சிக்கொல்லிகள் தெளித்தல், உரங்கள் இடுதல் போன்றவற்றில் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த செயல்விளக்க முகாமை துணை வேளாண் இயக்குனர் சாந்திபால்ராஜ் துவக்கி வைத்தார்.
வேளாண் அதிகாரி நடராஜன் ரசாயண பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லி மருந்துகள் பயிர்களுக்கு தெளிப்பான் மூலம் அடிக்கும்போது விவசாயிகளுக்கு ஏற்படும் கண்பாதிப்பு மற்றும் தோல்நோய் ஆஸ்துமா மற்றும் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
முகாமில் மதகடிப்பட்டு, கலிதீர்த்தாள் குப்பம், திருபுவனை, திருவாண்டார்கோவில், சன்னியாசிக்குப்பம் மற்றும் வாதானுார் ஆகிய வருவாய் கிராம விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனார்.
விவசாயிகளுக்கு பாதுகாப்பு கண் கண்ணாடிகள், ரப்பர் கையுரைகள், பருத்தி கையுரைகள், முகக் கவசம், தொப்பி ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது.
ஆத்மா தொழில்நுட்ப மேலாளர் சிரஞ்சீவி நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் பக்கிரி, புவனேஷ்வரி, செயல் விளக்க உதவியாளர் ஜெயசங்கர், அலுவலக ஊழியர்கள் சண்முகம், சுபாஷ், ஆகியோர் செய்திருந்தனர்.